நாகையில் கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு - நெற்றியில் பொட்டு வைத்து, பூச்சூடிய பெண்கள்
கைம்பெண்கள் தின எழுச்சி மாநாட்டில் கணவனை இழந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நாகை,
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23-ந்தேதி சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கணவனை இழந்த பெண்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் விதமாக இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில், 'கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் கணவனை இழந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சி மாநாட்டில், பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதன் பின் பூவையும், பொட்டையும் வைத்துக் கொள்ள தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மூத்த பெண்மணி ஒருவர் அங்கிருந்த பெண்களை மேடைக்கு அழைத்தார். தொடர்ந்து மேடையேறி வந்த பெண்கள் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, தலையில் மல்லிகைப் பூவை மகிழ்ச்சியுடன் சூடிக்கொண்டனர்.
உரிமைகளை மீட்டெடுக்கும் கைம்பெண்களின் இந்த செயல், காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதே போல் மூடநம்பிக்கைகள் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டு, தங்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.