மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி கத்திக்குத்து


மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி கத்திக்குத்து
x

செஞ்சி அருகே மனைவி, கள்ளக்காதலனை சரமாரியாக கத்தியால் குத்திய கணவர் போலீசில் சரணடைந்தார்.

விழுப்புரம்

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ஜேம்ஸ்(வயது 35). டிரைவர். இவருடைய மனைவி அருணா(28). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜேம்ஸ் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து அருணாவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரிடம் கோபித்துக்கொண்ட அருணா, செஞ்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார்.

கத்திக்குத்து

ஏற்கனவே அருணாவுக்கும், கொள்ளாரை சேர்ந்த அருண் மகன் விக்ரம்(35) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பழக்கம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் அருணா, தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் இருந்தார். இது பற்றி அறிந்ததும் ஆத்திரமடைந்த ஜேம்ஸ் நேற்று மதியம் 1.30 மணி அளவில் செஞ்சியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு கத்தியுடன் வந்தார். அங்கிருந்த அருணா மற்றும் அவரது கள்ளக்காதலன் விக்ரமை அவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் இருவருக்கும் முதுகு, கழுத்து, தோள்பட்டை, கையில் காயம் ஏற்பட்டது.

போலீசில் சரண்

சுதாரித்துக்கொண்ட அருணாவும், விக்ரமும் வீட்டில் இருந்து வெளியேறி செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே ஜேம்ஸ், செஞ்சி போலீசில் சரணடைந்தார். இது குறித்து அருணா கொடுத்த புகாரின் பேரில் ஜேம்ஸ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story