பெரம்பலூரில் மனைவி நல வேட்பு விழா
பெரம்பலூரில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் பிறந்த நாளான ஆகஸ்டு 30-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் மனைவிக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் பாலக்கரையில் உள்ள அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முதலில் இறை வணக்கம், குரு வணக்கம், தவம் ஆகியவை நடந்தது. பின்னர் தம்பதிகளுக்கு முதலில் காப்பு கயிறு, ரோஜாப்பூ, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. முதலாவதாக தம்பதிகளில் கணவர்கள் தங்களது மனைவிக்கு காப்பு கயிற்றையும், பின்னர் அவர்கள் தங்களது கணவருக்கு காப்பு கயிற்றை கட்டினர்.
இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன், மனைவி இருவரும் தங்களது திருமணம் முடிந்த நாளில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர். தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால் காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல் கணவன்-மனைவிக்காகவும், மனைவி-கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்து பார்ப்பதின் மூலம் அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பது இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஆகும். இதையடுத்து, கணவர்கள் தங்களது மனைவியின் தலையில் ரோஜாப்பூ வைத்து விட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கணவருக்கு வாழைப்பழத்தை ஊட்டி மகிழ்ந்தனர். விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புதுமண தம்பதி முதல் வயதான தம்பதியினர் வரை 75-க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர்.