விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை


விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் பகுதியில் விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

நிலக்கடலை சாகுபடி

நெகமம் அருகே செட்டியக்காபாளையம், வடக்கு காடு, கோதவாடி, குருநல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையால் கிடைக்கும் தண்ணீர் மற்றும் பி.ஏ.பி. பாசன மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வந்தது. குறைந்த சாகுபடி செலவு, செம்மண் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்து வந்ததால், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர்.

இதற்கிடையில் கோதவாடி குளத்தில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக மேற்கண்ட பகுதிகளில் உள்ள மழைநீர் ஓடைகளில் முகாமிடுகின்றன. மேலும் அடர்ந்த புதர் பகுதிகளில் பகல் நேரத்தில் பதுங்கும் அவை இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவது தொடர் கதையாக மாறி வருகிறது.

காட்டுப்பன்றிகளால் சேதம்

குறிப்பாக நிலக்கடலை செடிகளின் வேர்களில் கடலை பிடிக்க தொடங்கியதும், அவற்றை ருசி பார்க்க காட்டுப்பன்றிகள் கூட்டமாக வர தொடங்கிவிடுகின்றன. அவை செடிகளை வேரோடு சாய்த்து, தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. நிலக்கடலை தவிர்த்து வாழை, தென்னை, கத்தரி, முட்டைகோஸ், மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம் ஆகியவற்றையும் விட்டு வைப்பது இல்லை.

இதன் காரணமாக விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தகர டப்பாக்களை கட்டி விடுதல், பட்டாசுகளை வெடித்தல், சேலைகளை கொண்டு வேலி அமைத்தல் என்பன போன்ற பல வழிகளை கையாண்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. மேலும் வனத்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் கவலையுடன் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாற்று பயிர் சாகுபடி

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

செட்டியக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால், நிலக்கடலை சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இதனால் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் சாகுபடிக்கு மாறி வருகிறோம். ஏனென்றால், இந்த பயிரில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் குறைவு. ஆனால் சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story