விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்


விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்

நெகமம்,

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக வாழை, தக்காளி, கோகோ உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கால்நடை தீவனம் மற்றும் நிலக்கடலை, சோளம், கம்பு, எள், தட்டைப்பயறு உள்ளிட்டவையும் சாகுபடி செய்கின்றனர்.இந்த நிலையில், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நிலக்கடலை, தட்டைப்பயிறு மற்றும் புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்தும், மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. காட்டுப்பன்றிகளின் தொடர் அட்டகாசத்தால் பயிர்கள் சேதமடை கின்றன.இதனால் விவசாயி களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதை தடுக்க பலர் கம்பி வேலி அமைத்துள்ளனர். இதுதவிர வண்ண, வண்ண சேலைகளால் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் காற்றுக்கு சேலைகள் அசைவுகளும், அதில் இருந்து வரும் சத்தமும் கேட்டு காட்டுப்பன்றிகள் அச்சத்தில் அந்த பகுதிக்கு வருவதில்லை.

விவசாயிகளின் இந்த நூதன முறை ஓரளவு கைக்கொடுத்தாலும், இடைவெளி உள்ள பகுதி வழியாகவும், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள பகுதி வழியாகவும் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story