விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்-உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்-உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெகமம்
நெகமம் அருகே செட்டியக்காபாளையம், வடக்கு காடு, கோதவாடி, குருநல்லிபாளையம் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கோதவாடி குளத்தில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் கூட்டம், கிராமங்களிலுள்ள மழை நீர் ஓடைகளில் முகாமிடுகின்றன. பின்னர் அடர்ந்த புதர்ப்பகுதிகளில் பகல் நேரத்தில் பதுங்கும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் உணவுக்காக விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. விளை நிலங்களில் புகும் காட்டுப்பன்றிகள், நிலக்கடலை செடிகளை வேரோடு பிடுங்கி அட்டகாசம் செய்கின்றன. மேலும் வாழை, தென்னங்கன்றுகள், கத்தரிக்காய், முட்டைக்கோஸ், மரவள்ளி கிழங்கு ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. 60 நாட்களுக்கு மேல் பராமரித்த நிலக்கடலை செடிகளை, அறுவடையின் போது, பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் தொடர் நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, தகர டப்பாக்கள் கட்டி விடுதல், சேலைகளை கட்டி விடுதல், பட்டாசு வெடித்தல் என பல வழிகளை கையாண்டும் எவ்வித பலனும் இல்லை. வனத்துறையிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால் விரக்தியடைந்த விவசாயிகள், நிலக்கடலை சாகுபடியை கைவிட்டு, வெள்ளைச்சோளம் விதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.