மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு

கோவை அருகே மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
துடியலூர்
கோவை அருகே மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
காட்டு யானைகள்
கோவைைய அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி ஆனைக்கட்டி, தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, பூச்சியூர், பாலமலை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவை, தண்ணீர், உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. சில நேரங்களில் அவை பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே பூச்சியூர் பகுதிக்கு நேற்று காலை 22 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. அதன் மேல் ஒரு மின்கம்பம் 2 ஆக முறிந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மின்கம்பம் முறிந்தது
அதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வ ராஜ், மாவட்ட உதவி வன பாதுகாப்பாளர் செந்தில் குமார், கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில், வனப்பகுதிக்குள் செல்லும்போது அந்த காட்டு யானை வழியில் இருந்த மின்கம்பத்தை வேகமாக உரசி இருக்கலாம்.
இதன் காரணமாக அந்த மின்கம்பம் திடீரென்று 2 துண்டாக முறிந்து யானையின் மீது விழுந்தது.
யானை இறந்தது
அதில் இருந்து சுதாரித்து எழுவதற் குள் மின்கம்பத்தில் இருந்த மின்வயர்கள் யானையின் மீது பட்டது. இதனால் மின்சாரம் தாக்கியதில் அந்த யானை பரிதாபமாக இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை டாக்டர், யானையின் உடலை பரிசோதனை செய்தார். அதைத் தொடர்ந்து யானையின் உடல் வனப் பகுதிக்குள் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு தேவையான உதவிகளை நகராட்சி தலைவர் அறிவரசு செய்தார்.
தடுக்க நடவடிக்கை
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை இறப்பது தொடர்கதையாக இருக்கிறது.
எனவே காட்டு யானைகள் வரும் பகுதிகளில் உள்ள சேதமடைந்த மின் கம்பங்களை அகற்ற வேண்டும். மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






