பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானை நடமாட்டம்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை


பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானை நடமாட்டம்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 July 2023 12:45 AM IST (Updated: 26 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

பலாப்பழங்கனை ருசித்தது

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, மூலைக்கடை, பாதிரிமூலா, செம்பக்கொல்லி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு, எடத்தால் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகிறது. மேலும், தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை உடைத்தும் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. அய்யன்கொல்லியிலிருந்து கொளப்பள்ளி பந்தலூர், கூடலூர் செல்லும் அரசு பஸ்களையும், தனியார் வாகனங்களையும் வழிமறிக்கிறது. தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து தொழிலாளர்களையும் துரத்துகிறது. கடந்த சில தினங்களாக அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே காட்டுயானைகள் முகாமிட்டு வருவதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று அய்யன்கொல்லி அரசு உண்டு உறைவிடப்பள்ளி இரும்பு நுழைவு வாயிலை உடைத்து, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. பின்னர் அந்த காட்டுயானை பலாமரத்திலிருந்த பலா பழங்களை தும்பிக்கையால் பிடுங்கி ருசித்து தின்றது.

சாலையோரத்தில் காட்டு யானை

பின்னர் நேற்று கொளப்பள்ளி அரசுதேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்- 3 செம்பக்கொல்லியில் முகாமிட்டது.

இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதேபோல் சேரங்கோடு எலியாஸ் கடை பகுதிகளில் காட்டு யானை சாலையோரம் நடமாடியதோடு, அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமையில் வனத்துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்களும் காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கவனமாக செல்லும்படி எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.


Next Story