காட்டுயானைகள் அட்டகாசம்


காட்டுயானைகள் அட்டகாசம்
x

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் வீடு, கடை, கார் சேதம் அடைந்தது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் வீடு, கடை, கார் சேதம் அடைந்தது.

வீட்டை உடைத்த காட்டுயானை

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் அவ்வபோது வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. கூடலூர் அருகே தருமகிரி கிராமத்துக்குள் இன்று அதிகாலை 3 மணிக்கு ஒரு காட்டுயானை நுழைந்தது. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த தேவசியா என்ற பேபி என்பவரது வீட்டை உடைத்தது. உடனே சத்தம் கேட்டு தேவசியா, அவரது மனைவி ரோசம்மா மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பக்க அறையை காட்டு யானை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பின்வாசல் வழியாக குடும்பத்துடன் வெளியே தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர்.

பிரச்சினைக்கு உரிய தீர்வு

இதேபோன்று கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளரிக்கா பட்டணம் பகுதியில் காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரை உடைத்து அட்டகாசம் செய்தது. இதில் கார் சேதம் அடைந்தது. இதை கண்ட அப்பதி மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தவிர கூடலூர் தாலுகா தேவாலா அருகே அட்டி பகுதியில் மற்றொரு காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த தம்பி என்பவரது டீக்கடையை உடைத்தது. இதில் பொருட்கள் சேதமானது. காட்டுயானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


Next Story