வீடுகளின் கதவை உடைத்த காட்டு யானைகள்


வீடுகளின் கதவை உடைத்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 26 Sep 2023 7:45 PM GMT (Updated: 26 Sep 2023 7:45 PM GMT)

வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் உணவு தேடி வீடுகளின் கதவை உடைத்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் உணவு தேடி வீடுகளின் கதவை உடைத்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

காட்டு யானைகள்

கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் வால்பாறை பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து உள்ளன. அவை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் 12 காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் இரவு 8.30 மணிக்கு தாய்முடி எஸ்டேட் குழிபிரட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.

இரவு 8.30 மணிக்கே காட்டு யானைகள் குடியிருப்புக்குள் வருவதை எதிர்பார்க்காத தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். உடனே இதுகுறித்து மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.

தொழிலாளர்கள் பீதி

இதற்கிடையே காட்டு யானைகள் ராஜலட்சுமி, தனபாக்கியம் ஆகியோரது வீடுகளின் கதவு, சுவரை உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து உணவு தேடி துதிக்கையை வீட்டுக்குள் விட்டு பொருட்கள் ஏதும் கிடைக்குமா என தேடின. இதனால் தொழிலாளர்கள் பீதியில் வீடுகளுக்குள் முடங்கினர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பின்னர் சோலையாறு சித்தி விநாயகர் கோவில் வளாகத்துக்குள் யானைகள் நுழைந்தன. அங்கிருந்து சோலையாறு சிலுவை மலை வனப்பகுதிக்குள் சென்று முகாமிட்டு உள்ளன. இருப்பினும், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வீட்டை உடைத்து சேதப்படுத்தி வருவதால், தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வரவே அச்சம் அடைந்து உள்ளனர்.

எனவே, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story