தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டுயானைகள்


தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டுயானைகள்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூழாங்கல் ஆற்றின் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

கூழாங்கல் ஆற்றின் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

காட்டுயானைகள் கூட்டம்

வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்கள் வழியாக காட்டுயானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக சிறுகுன்றா எஸ்டேட் மற்றும் நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு இடைப்பட்ட தேயிலை தோட்டத்தை ஒட்டிய சிறு வனச்சோலை பகுதியில் 3 குட்டிகளுடன் 10 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு இருந்தது.

இந்த யானைகள் கூட்டம், நேற்று மதியம் 2 மணியளவில் வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றை ஒட்டிய நல்லகாத்து எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதி வழியாக குட்டிகளை பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

வனத்துறையினர் கண்காணிப்பு

இதை அறிந்ததும், கூழாங்கல் ஆற்றில் தேயிலை தோட்டத்தை ஒட்டிய இடத்தில் குளித்துக் கொண்டு இருந்தவர்களை வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போலீசாரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்களும் இணைந்து பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் காட்டு யானைகளை தேயிலை தோட்ட பகுதி வழியாக விரட்டி சென்று, அங்குள்ள புல்வெளி பகுதியில் நிறுத்தி கண்காணித்து வருகின்றனர். கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்று குளிப்பதற்கு தடை விதிக்கவும், அந்த இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைப்பதற்கும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Next Story