தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்


தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 23 July 2023 8:15 PM GMT (Updated: 23 July 2023 8:15 PM GMT)

பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின.

காட்டுயானைகள்

பொள்ளாச்சி அருகே புளியங்கண்டி கிராமம் உள்ளது. இங்கு தென்னை விவசாயம் பிரதான தொழில் ஆகும். இந்த நிலையில் புளியங்கண்டி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவில் குட்டிகளுடன் 3 காட்டுயானைகள் புகுந்தது. தொடர்ந்து அங்குள்ள தென்னந்தோப்புக்குள் சென்ற காட்டுயானைகள் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முட்டி சாய்த்து சேதப்படுத்தின. மேலும் அந்த மரங்களின் குருத்துகளை தின்று அட்டகாசம் செய்தன.

இதை கண்ட விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அகழி அமைக்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் அடிக்கடி காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவை விவசாயிகள் மற்றும் பொதுமக்களை தாக்கும் அபாயம் காணப்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் அகழி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story