தேயிலை எஸ்டேட் அலுவலகத்தை சேதப்படுத்திய காட்டுயானைகள்


தேயிலை எஸ்டேட் அலுவலகத்தை சேதப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 7 May 2023 1:15 AM IST (Updated: 7 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே தேயிலை எஸ்டேட் அலுவலகம், கோவிலை காட்டுயானைகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் குழந்தைகள் காப்பகத்தையும் உடைத்தன.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே தேயிலை எஸ்டேட் அலுவலகம், கோவிலை காட்டுயானைகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் குழந்தைகள் காப்பகத்தையும் உடைத்தன.

இடம்பெயரும் காட்டுயானைகள்

கோடைகாலம் தொடங்கியதால் வால்பாறை வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் கூட்டம், கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லை பகுதியை ஒட்டிய எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுயானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையை ஒட்டிய வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 4 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பன்னிமேடு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

காப்பகம், கோவிலில் அட்டகாசம்

அவை எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தின் கதவு, ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்தது. மேலும் குழந்தைகளுக்கு சமையல் செய்வதற்கு வைத்திருந்த உணவு பொருட்கள், முட்டைகள், சத்து மாவுகள் மற்றும் திண்பண்டங்களை தின்று சேதப்படுத்தியதோடு துதிக்கையால் வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது.இது தவிர பன்னிமேடு எஸ்டேட் தோட்ட அலுவலகத்தை உடைத்து உள்ளிருந்த பொருட்களை வெளியே எடுத்து வீசியது.

மேலும் அலுவலகத்திற்கு முன்னால் இருந்த மாரியம்மன் கோவிலின் கதவு, ஜன்னலை உடைத்து அலங்கார பொருட்களை வெளியே வீசி எறிந்தது. அதன்பின்னர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதை அறிந்த தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story