தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 21 Aug 2023 1:00 AM IST (Updated: 21 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
திண்டுக்கல்

காட்டுயானைகள் அட்டகாசம்

ஆயக்குடி மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் தென்னை, கொய்யா விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. மேலும் மானாவாரியாக மக்காச்சோளம், பயறு வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி காட்டுயானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்ட பகுதிக்கு வருவது வாடிக்கை. அதன்படி வனவிலங்குகள் வரும்போது பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.

இந்நிலையில் ஆயக்குடி மலையடிவார பகுதியில் சில வாரங்களாக காட்டுயானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன. இவை இரவு நேரங்களில் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திவிட்டு பகலில் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. யானை அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திந்து வருகின்றனர்.

தென்னை மரங்கள் சேதம்

இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்னிமலை கரடு பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் காட்டுயானைகள் புகுந்தது. அவை தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தியது. மேலும் நீர் பாய்ச்சுவதற்காக நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் குழாய்களையும் மிதித்து நாசம் செய்துவிட்டு சென்றது.

காலையில் தோட்டத்துக்கு வந்த கிருஷ்ணசாமி, தென்னை மரங்கள் சேதமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து வருவாய் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆயக்குடி பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், வனத்தை ஒட்டிய பகுதியில் சோலார் வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story