அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மஞ்சூர்
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளதால், காட்டு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் மாலை 6 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் உள்ளூர் வாகனங்களை தவிர்த்து, சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.
கெத்தை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் தண்ணீரை தேடி செல்வதால் அடிக்கடி மலைப்பாதையை கடந்தும், முகாமிட்டும் வருகின்றன. இந்தநிலையில் மஞ்சூர்-கோவை சாலையில் 2 குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டு நடமாடின. அந்த நேரத்தில் கெத்தையில் இருந்து மஞ்சூரை நோக்கி அரசு பஸ் வந்தது. அப்போது சாலையின் குறுக்கே யானைகள் நிற்பதை பார்த்த டிரைவர் அரசு பஸ்சை சற்று தொலைவில் சாலையோரமாக நிறுத்தினார்.
பயணிகள் அச்சம்
அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்தன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து சற்று நேரம் சாலையில் நின்றிருந்த யானைகள், பஸ் நிறுத்தப்பட்டு இருந்த பகுதியை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. அப்போது யானைகள் பஸ்சை தாக்காமல் சென்றதால், பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகளை செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.