தொழிற்சாலை அதிகாரி வீட்டில் காட்டுயானைகள் அட்டகாசம்


தொழிற்சாலை அதிகாரி வீட்டில் காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:45 PM GMT)

உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் தொழிற்சாலை அதிகாரி வீட்டில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அவை ஜன்னல்களை உடைத்து பொருட்களை சூறையாடின.

கோயம்புத்தூர்

வால்பாறை

உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் தொழிற்சாலை அதிகாரி வீட்டில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அவை ஜன்னல்களை உடைத்து பொருட்களை சூறையாடின.

காட்டுயானைகள் கூட்டம்

வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் தண்ணீரை தேடி காட்டுயானைகள் அலைந்து திரிகின்றன. அவை நீரோடைகளிலும், அதனருகில் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் முகாமிட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு அருகில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்குள் 7 யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்தது. இந்த யானைகள் அந்த தொழிற்சாலையின் உதவி அதிகாரி ஜான்சன் என்பவரது வீட்டை முகாமிட்டு, ஜன்னல்களை உடைத்தது. மேலும் துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தியது.

சமையல் அறை சூறை

அப்போது ஜான்சன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் தாயார் மட்டுமே இருந்தனர். அவர்கள், பொருட்களை காட்டுயானைகள் உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக பதுங்கி கொண்டனர்.

இதற்கிடையில் வீட்டின் சமையல் அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் காட்டுயானைகள் சூறையாடி அட்டகாசம் செய்தன. இதையடுத்து திரண்டு வந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு காட்டுயானைகளை விரட்டியடித்தனர். பின்னர் அங்கு வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் காட்டுயானைகள் மீண்டும் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.


Next Story