வால்பாறையில் தேயிலை தோட்ட அதிகாரியின் வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்


வால்பாறையில் தேயிலை தோட்ட அதிகாரியின் வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:46 PM GMT)

வால்பாறையில் தேயிலை தோட்ட அதிகாரியின் வீட்டை காட்டு யானைகள் சூறையாடின.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் தேயிலை தோட்ட அதிகாரியின் வீட்டை காட்டு யானைகள் சூறையாடின.

காட்டு யானைகள் முகாம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாடி வருகிறது. நேற்று காலை 11 மணியளவில் குட்டிகளுடன் 10 யானைகள் கொண்ட கூட்டம் வால்பாறை நகர் பகுதிக்கு அருகில் உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றுப் பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் செல்ல அச்சப்பட்டனர். மேலும் இதுபற்றி அறிந்ததும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளையும், துணிகள் துவைத்துக் கொண்டிருந்த உள்ளூர் வாசிகளையும் ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தனர். சிறிது நேரம் ஆற்றோர பகுதியில் நின்ற யானைகள் ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள சிறுகுன்றா வனப் பகுதிக்கு சென்றது.

வீட்டை சூறையாடியது

இந்த சுங்கம் ஆற்றுப் பகுதிக்கு வந்த யானைகள் கூட்டத்தை வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதேபோல் வால்பாறை அருகில் உள்ள சேக்கல்முடி புதுக்காடு எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலை 4 மணிக்கு நுழைந்த 7 யானைகள் கொண்ட கூட்டம் தோட்ட அதிகாரி வீட்டை சுற்றி சுற்றி உடைத்து சேதப்படுத்தி வீட்டிலிருந்து பொருட்கள் முழுவதையும் சூறையாடியது. வீட்டிலிருந்த தோட்ட அதிகாரி தமிழரசன் அருகில் இருந்த வீடுகளுக்கு ஓடி உயிர் தப்பினார். வனத்துறையினரும் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டு நின்று வருவதால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்துடன் தொழிலாளர்கள் உள்ளனர்.


Next Story