மாரியம்மன் கோவிலை சூறையாடிய காட்டுயானைகள்


மாரியம்மன் கோவிலை சூறையாடிய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அக்காமலை எஸ்டேட்டில் புகுந்து மாரியம்மன் கோவிலை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

அக்காமலை எஸ்டேட்டில் புகுந்து மாரியம்மன் கோவிலை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

இடம்பெயர்ந்த யானைகள்

வால்பாறையில் உள்ள வனப்பகுதிக்கு கேரள வனப்பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன. இந்த யானைகள் கூட்டம், ஆங்காங்கே உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் எந்த எஸ்டேட் பகுதிக்கு சென்றாலும், காட்டுயானைகளை பார்க்கலாம் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை, ஊசிமலை, கருமலை ஆகிய எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 6 யானைகள் கொண்ட கூட்டமும், 3 யானைகள் கொண்ட கூட்டமும் சுற்றித்திரிந்து வருகின்றன.

அட்டகாசம்

இதில் 3 யானைகள் கொண்ட கூட்டம், நேற்று அதிகாலை 3 மணியளவில் அக்காமலை எஸ்டேட் 21-ம் ெநம்பர் புதுப்பாடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள பூமாரியம்மன் கோவிலின் சுவற்றை உடைத்து அட்டகாசம் செய்தது. மேலும் கருவறையையும் உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதை கண்ட தொழிலாளர்கள் திரண்டு வந்து காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்ட முயன்றனர். ஆனாலும் கோவில் வளாகத்திலேயே காட்டுயானைகள் சுற்றித்திரிந்து கோவிலை சூறையாடின. பின்னர் நீண்ட நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றன.

அச்சம்

இதையடுத்து வனத்துறையினருக்கு, தொழிலாளர்கள் தகவல் கொடுத்தனர். மேலும் மீண்டும் ஊருக்குள் காட்டுயானைகள் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் விடிய விடிய கண் விழித்து தூங்காமல் தவித்தனர்.

காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், கூடுதல் வன ஊழியர்களை பணியமர்த்தி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story