ஓவேலியில், வீட்டை சூறையாடிய காட்டுயானைகள்
ஓவேலியில், வீட்டை காட்டுயானைகள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கூடலூர்: ஓவேலியில், வீட்டை காட்டுயானைகள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காட்டுயானைகள் புகுந்தது
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பலாப்பழ சீசன் நிலவுவதால் காட்டு யானைகள் விவசாய நிலங்களை தேடி ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து காட்டுயானைகள் வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாவா என்ற முஸ்தபா.
இவர், கூடலூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர், தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் அவரது தாயார் குஞ்சிபாத்து(வயது 70), குழந்தைகள் மாஷிதா, முருஷிதா, மிதுலாஷ் ஆகியோர் இருந்தனர். இதனிடையே நள்ளிரவு சமயத்தில் வனப்பகுதியில் இருந்து பாலவாடி பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது.
வீட்டை சூறையாடியது
தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் திடீரென காட்டு யானைகள், பாவாவின் வீட்டை முற்றுகையிட்டு சுவர்களை சேதப்படுத்தி உடைத்தன. இந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த குஞ்சிபாத்து மற்றும் குழந்தைகள் எழுந்து காட்டுயானை, வீ்ட்டை சேதப்படுத்துவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காட்டுயானைகள் சேதப்படுத்தியதில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் பயத்தில் வீட்டில் இருந்த கட்டிலின் அடியில் சென்று அனைவரும் பதுங்கி கொண்டனர்.
இதற்கிடையே மழையும் பெய்து கொண்டிருந்தது. பின்னர் காட்டு யானைகள் விடியற்காலை வரை அப்பகுதியில் நின்றுவிட்டு சென்றது. இதனால் அவர்கள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனாலும் இரவில் தூக்கத்தை தொலைத்து விழித்தபடி வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டுயானைகள் சூறையாடிய வீட்டை பார்வையிட்டனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்
அப்போது அவர்களிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். வீட்டை, காட்டுயானைகள் சூறையாடி சென்றது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.