பட்டப்பகலில் உலா வரும் காட்டுயானைகள்
பட்டப்பகலில் உலா வரும் காட்டுயானைகள்
வால்பாறை
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வர தொடங்கிய நாளில் இருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும், எஸ்டேட் பகுதியில் உள்ள சாலைகளிலும் பட்டப்பகலிலேயே நடமாடி வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதி சாலையில் கடந்த 20 நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை வாகனங்களை துரத்தி வந்தது. இதனால் கடந்த 10 நாட்களாக அந்த சாலையில் கேரள அரசு பஸ் மற்றும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த யானை, கூட்டத்துடன் சேர்ந்துள்ளதால் நேற்று முதல் கார், வேன் செல்வதற்கும் மாலை 5 மணி வரை கேரள வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியிலும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பட்டப்பகலில் 8-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலைகளிலும், தேயிலை தோட்டங்களிலும் உலா வருகின்றன.