குட்டியுடன் மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
குட்டியுடன் காட்டுயானைகள்
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் காய்க்க தொடங்கி உள்ளன. இந்த சமயத்தில் காய்த்து குலுங்கும் பலாப்பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் வந்து முகாமிட்டு உள்ளன. இவ்வாறு முகாமிட்டுள்ள யானைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களிலும், சாலைகளிலும் உலா வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை கிராம பழங்குடியினர் தயாரிப்புக்கள் விற்பனை மையம் அருகே குட்டியுடன் 2 யானைகள் நின்று கொண்டு இருந்தன.
எச்சரிக்கை
இந்த யானைகள் சாலைக்கு வரக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பழங்குடியின மக்களின் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். பலாப்பழ சீசன் காரணமாக இந்த சாலையில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.