வன விலங்குகள்- பறவைகள் விளக்க மையம்


வன விலங்குகள்- பறவைகள் விளக்க மையம்
x

பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வனவிலங்குகள் விளக்க மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்

கோவை,

பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வனவிலங்குகள் விளக்க மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்குகள் விளக்க மையம்

ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனரும், கோவை மண்டல முதன்மை வன பாதுகாப்பு அதிகாரியுமான எஸ்.ராமசுப்பிரமணியன் கூறியதாவது:-

டாப்சிலிப் செல்லும் வழியில் சேத்துமடை சோதனைச்சாடி அருகே மலையடிவாரத்தில் வனவிலங்குகள் விளக்க மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தை வனவிலங்குகள் பற்றிய அறிவு வள மையமாக மாற்ற பல அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.

பசுமை சூழ்ந்த இந்த மையத்தில் 30 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் உள்ளது. இது பார்வையாளர்களுக்கு வனவிலங்கு தொடர்பான வீடியோக்கள் திரையிட பயன்படும். சிறிய கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

விலங்குகள், பறவை இனங்கள்

கட்டிடத்தின் மைய முற்றத்தில் ஒரு திறந்த வெளி அரங்கமும் அமைந்துள்ளது. கற்றாழை வகைகளுக்காக பிரத்யேகமாக ஒரு தோட்டம் உருவாக்கப்படுகிறது.

புலி, சிறுத்தை, சிங்கவால் குரங்கு, மின்மினிப் பூச்சி, பூரான் உள்ளிட்டவற்றின் உருவங்கள் இந்த மையத்தில் அமைக்கப்படுகிறது.

தென்னை தலைநகரான பொள்ளாச்சி பகுதிக்கு புகழ் சேர்க்கும் வகையில், மின்மினிப் பூச்சி உருவம் முழுவதுமாக தேங்காய் மட்டைகளால் செய்யப்பட்டுள்ளது .

தத்ரூப காட்சிகள்

விளக்க மையத்தில் சென்சார் அடிப்படையிலான கருவியும் பொருத்தப்படுகிறது. யானை மற்றும் புலி காட்சிகளை சுவரில் காண்பிக்கப்படும். யாராவது இந்த உருவ படங்களைத் தொடும்போது விலங்குகள் அசைவுகள் மற்றும் குரல்களும் ஒலிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. உணவுச் சங்கிலியை எளிதாக விளக்கும் வகையில் 3-டி வீடியோ கருவியும் பொருத்தப்படுகிறது. இந்த மைய பணிகள் முடிந்ததும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story