பள்ளிபாளையத்தில் மின்மயானம் அமைக்கப்படுமா?
பள்ளிபாளையத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பள்ளிபாளையம்
மக்கள் தொகை அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி கரையோரம் புதிய பாலத்தின் அருகில் மயானம் உள்ளது. இந்த மயானம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்பட்டது. அதிலேயே இறந்தவர்களை புதைப்பதும், எரிப்பதும் நடைமுறையில் இருந்தது. ஆடு, மாடுகள் மற்றும் நாய்கள் உள்ளே சென்று சுற்றிவருவதுமாக இருந்தது.
இதையடுத்து மயானத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு, முன்புறம் நுழைவுவாயில் கட்டப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டது. அதற்கு ஒரு காவலாளி நியமிக்கப்பட்டு, அங்கு பணியில் இருந்து வந்தார். இதற்கிடையே நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகமானதால், புதைத்த இடத்திலேயே மீண்டும் புதைப்பதும் நடந்து வந்தது.
இறந்த உடலை எரிப்பதற்கு என்று ஒரு 'ஷெட்' போடப்பட்டு அதன் கீழ் விறகு மற்றும் வறட்டிகளை கொண்டு எரிப்பது வழக்கமாக இருந்தது. இவ்வாறு எரிப்பதினால் புகை பரவி காற்றில் கலந்து, நோய் பரவ காரணமாக அமைந்து விடுகிறது.
மின்மயானம் வேண்டும்
அருகிலேயே காவிரி ஆற்றை தாண்டி அக்கரையில் மின்சார மயானம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டை சேர்ந்த தனியார் டிரஸ்ட் மூலம் இந்த மயானம் செயல்படுகிறது. பள்ளிபாளையம் சுற்றுவட்டார மக்கள் இங்கிருந்து அக்கரைக்கு சென்று இறந்தவர்களை மின்மயானத்தில் எரிக்கிறார்கள். எனவே பள்ளிபாளையம் மயானத்திலேயே மின்சாரம் மயானம் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது பள்ளிபாளையம் மயானம் சுத்தமாக இல்லை. செடிகளுடன் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் குப்பைகளை கொண்டு சென்று அங்கு கொட்டி எரிக்கின்றனர். இதனால் புகை பரவி கண் எரிச்சல் ஏற்படுகின்றது. உள்ளே நடந்து செல்லும் வழியில் குப்பைகள் கிடப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுதவிர மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
தூய்மை பணிக்கான விருது
இது பற்றி நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக மழைக்காலமாக இருந்ததினால் செடிகள் வளர்ந்து உள்ளன. மழை பெய்து கொண்டிருப்பதால் சுத்தம் செய்ய இயலவில்லை. தற்போது சுத்தம் செய்ய உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்து செடிகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பள்ளிபாளையம் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த ஆவன செய்து வருகிறோம். அதனால் மயானம் போதிய வசதியுடன் செயல்பட தேவையான பணிகள் விரைந்து நடக்க உள்ளது. தமிழகத்தில் தூய்மை பணிக்காக விருது வழங்குவதற்காக பரிசீலிக்கப்பட்ட நகராட்சிகளில் பள்ளிபாளையம் நகராட்சி முதல் 5 இடங்களில் உள்ளது.
அரசுக்கு மனு அனுப்பி உள்ளோம்
நகராட்சி துணைத் தலைவர் பாலமுருகன்:-
மயானத்தில் குப்பைகளை கொட்டுவது உடனடியாக நிறுத்தப்படும். கொட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். சேறு, சகதியை அகற்ற ஏற்பாடு செய்யப்படும். அங்கு குளிப்பதற்கு என்று அறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் பள்ளிபாளையத்தில் மின்மயானம் அமைக்க அனுமதி வேண்டி அரசுக்கு மனு அனுப்பி உள்ளோம். பதில் வந்தவுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பராமரிப்பு இல்லை
சமூக ஆர்வலர் சபரிநாதன்:-
பள்ளிபாளையம் பகுதியில் உள்ள இந்துக்களின் மயானபூமி சுகாதார மற்ற நிலையில், பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. எனவே உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
இந்த மயானம் தற்போது குப்பைகளை கொட்டும் கழிவு தொட்டியாக உள்ளது. இதனால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே இந்த மயானத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். இங்கேயே மின்மாயனம் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.