நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம்ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்லும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்லும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ரெயில்வே கேட்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், தாமிரபரணி ஆற்றுப்பாலத்துக்கும் இடையில் மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் நெல்லை பாபுஜி நகர், சி.என்.கிராமம், குறுக்குத்துறை, டவுன் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
நெல்லையில் இருந்து நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் செல்லும்போது மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் மூடப்படுவதால், சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்லும்போது ரெயில்வே கேட்டின் இருபுறம் காத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
பொதுமக்கள் அவதி
அவசர தேவைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்கிறவர்களும் ரெயில்வே கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகன நெரிசலில் சிக்கி பரிதவிக்கின்றனர். ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைக்கு செல்கிறவர்களும் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் ரெயில்வே கேட்டிலேயே உயிரை விடும் துயரங்களும் நிகழ்ந்துள்ளன.
காலை, மாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் உரிய நேரத்தில் வகுப்புகளுக்கு செல்ல முடியாமலும், தேர்வெழுத முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தொழிலாளர்கள், அலுவலர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவசர தேவைக்கு எளிதில் செல்ல முடியாமல் ரெயில்வே கேட்டில் பரிதவிக்கின்றனர்.
எனவே மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.
இரட்டை ரெயில்பாதை
நெல்லை சி.என்.கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்:-
நாகர்கோவில், திருச்செந்தூர் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் பழமைவாய்ந்த மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டை கடந்துதான் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருகிறது.
இந்த வழியாக சரக்கு ரெயில்களும் அதிகளவில் சென்று வருகின்றன. தற்போது இரட்டை பாதை அமைக்கப்பட்டு உள்ளதால் அதிகளவில் ரெயில்கள் செல்கின்றன. எனவே இங்கு ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை உடனே அமைத்து தர வேண்டும்.
பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல...
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் கருப்பசாமி:-
நெல்லை சந்திப்பில் இருந்து ரெயில் புறப்படும்போதே மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டை மூடி விடுகின்றனர். அதேபோன்று திருச்செந்தூரில் இருந்து வரும் ரெயில் பாளையங்கோட்டை வந்தவுடனும், நாகர்கோவில் மார்க்கமாக வரும் ரெயில் செங்குளம் வந்தவுடனும் மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டை மூடி விடுகின்றனர்.
அந்த ரெயில்கள் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாக மெதுவாக வந்து மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டை கடந்த பின்னர்தான் மீண்டும் கேட்டை திறக்கின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் கேட்டை மூடினால் மீண்டும் திறப்பதற்கு 20 நிமிடத்துக்கு அதிகமாகிறது.
மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டை தவிர்த்து மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்றால் டவுன் அல்லது மேலப்பாளையம் வழியாகத்தான் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும்.
எனினும் மேலப்பாளையம் ரெயில்வே கேட்டும் மூடப்படுவதால் அப்பகுதி வழியாக செல்கிறவர்கள் மாற்றுப்பாதையின்றி பரிதவிக்கின்றனர். எனவே இந்த வழியாக எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பதை ரெயில்வே நிர்வாகம் கணக்கில் கொள்ளாமல், எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
50-க்கும் மேற்பட்ட முறை
சி.என். கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி செல்வகணபதி:-
மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் வழியாகத்தான் சி.என்.கிராமம், பாபுஜிநகர், குறுக்குத்துறை, கருப்பந்துறை, விளாகம் உள்ளிட்ட பல்வேறு ஊர் மக்கள் நெல்லைக்கு வந்து செல்கின்றனர்.
மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் தினமும் 50-க்கும் மேற்பட்ட முறை மூடப்படுவதால் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அங்கு ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டி பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவதி
சி.என்.கிராமத்தைச் சேர்ந்த சுசீலா:-
எங்கள் கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் காலையில் மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டை கடந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பல மணி நேரத்துக்கு முன்பே வீட்டில் இருந்து புறப்பட்டு செல்கிறார்கள்.
அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்ல முடியாததால் பெரிதும் அவதிப்படுகிறோம். இதனால் பலரும் டவுன் வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி வருகிறார்கள். சில நேரங்களில் அடுத்தடுத்து ரெயில்கள் வருவதால் பல மணி நேரம் ரெயில்வே கேட் மூடியே கிடக்கிறது.
மக்கள்தொகை அதிகரிப்பு
ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி செல்லத்துரை:-
டிராபிக் கேட், எலக்ட்ரிகல் கேட் என இரு வகையான ரெயில்வே கேட்டுகள் உள்ளன. ரெயில் நிலையம் அருகில் இருப்பது டிராபிக் ரெயில்வே கேட் ஆகும். மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் டிராபிக் கேட் வகையைச் சேர்ந்தது. அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துதான் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
மீனாட்சிபுரம், பாபுஜி நகர், சி.என்.கிராமம் போன்றவை வளர்ச்சியடைந்த பகுதிகளாகி மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. நான் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளராக இருந்தபோது, மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டில் மக்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று எம்.பி.க்களிடம் பேசினேன். ஏனென்றால் அங்கு மேம்பாலம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை.
மாவட்ட நிர்வாகம் ெரயில்வே துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து இடம் ஆர்ஜிதம் செய்து ெரயில்வே துறையிடம் ஒப்படைத்து, அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை அனுப்ப வேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.