அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தரப்படுமா?


அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தரப்படுமா?
x

அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தரப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வடபாதிமங்கலத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரத்தை பெருக்க

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் உள்ள வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர், சோலாட்சி, எள்ளுக்கொல்லை காலனி, மாதாகோவில்கோம்பூர், மாயனூர், பூசங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் வீடுகளில் கொட்டகை அமைத்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

மாடுகள் வளர்ப்பதன் மூலம் பால் விற்பனை செய்தும், ஆடு- கோழி போன்ற கால்நடைகள் மூலம் குடும்பம் நடத்துவதற்கு தேவையான வருவாயை அவர்கள் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகள் திடீரென நோய் வாய்ப்பட்டும், மேய்ச்சலுக்கு செல்லும் போது காடுகளில் முட்களில் சிக்கி காயம் அடைந்தும் வருகின்றன.

கால்நடைகள் இறந்துவிடுகின்றன

இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மிகவும் தூரத்தில் உள்ள சாத்தனூர், திட்டச்சேரி போன்ற ஊர்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்லும் நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நீண்ட தூரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு செல்லும் போது வழியிலேயே பல கால்நடைகள் இறந்துவிடுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். கால்நடைகள் உயிர் இழப்பை தவிர்க்க வடபாதிமங்கலத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி்க்கை விடுத்து வருகின்றனர்.

கவனை

இதனை போக்கும் வகையில் வடபாதிமங்கலம் கரும்பு ஆலை அருகே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கவனை ஏற்படுத்தப்பட்டது என்றும், ஆனால் அதனை செயல்படுத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடபாதிமங்கலத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story