ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படுமா?
ராசிபுரம் நகரம் வளர்ச்சி அடைய ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராசிபுரம்
வளர்ச்சி அடையவில்லை
சேலம் மற்றும் நாமக்கல் ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்தபோது, சேலத்துக்கு அடுத்தபடியாக நகராட்சி அந்தஸ்து பெற்ற முதல் நகரம் ராசிபுரம். இங்கு தற்போதைய மக்கள் தொகை 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. நெய் மணம் கமழும் ராசிபுரத்தில் விவசாயம், பட்டு மற்றும் கைத்தறி நெசவு தொழில், ஜவ்வரிசி தொழில்களில் சிறந்து விளங்குகிறது. ஆனால் ராசிபுரம் மற்ற நகரங்களை போல் தொழில் ரீதியாகவோ மற்ற வகையிலோ குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றமோ, வளர்ச்சியோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நகரம் வளர்ச்சி அடைய போக்குவரத்து வசதி அத்தியாவசியமானது. அத்தகைய போக்குவரத்து வசதி இல்லாமல் போனதே நகரம் வளர்ச்சி அடையாததற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ராசிபுரம் நகரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 5 கி.மீ. தூரம் உள்ளே தள்ளி உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, ராமேஸ்வரம் போன்ற நெடுந்தூர பஸ்கள் ராசிபுரத்தை எட்டிப்பார்த்ததில்லை. ராசிபுரம் நகரை சுற்றி 3 புறங்களிலும் ஏரிகள் சூழ்ந்து உள்ளன. இது போன்ற சில காரணங்களால் ராசிபுரம் நகரம் வளர்ச்சி அடையவில்லை.
ஆண்டகளூர்கேட்டில் பஸ் நிலையம்
எனவே ராசிபுரம் நகரம் வளர்ச்சி அடைய வேண்டுமானால் ஆண்டகளூர்கேட்டில் ராசிபுரம் நகரில் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யாமல், புதிதாக புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. அது தற்கால தேவைக்கு அத்தியாவசியமானது. மதுரை, நெல்லை, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களில் இருந்து சேலம், பெங்களூரு செல்லும் பஸ்கள் ஆண்டகளூர்கேட்டில் பஸ் நிலையம் அமைத்தால் அங்கு நின்று செல்லும். பயணிகள் ஏறி இறங்க வசதியாக இருக்கும்.
அதேபோல் மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை போன்ற வெளி இடங்களுக்கு செல்லும் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பயணிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பயன் அடைவர். புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுமானால் ராசிபுரம் நகரத்திற்கு டவுன் பஸ்கள் மூலம் பயணிகள் பயணிக்கலாம். மேலும் தொழில் வளர்ச்சி அடையும் வாய்ப்பும் உள்ளது.
தனிக்கவனம்
ராசிபுரத்தில் போதிய சாலை வசதி இல்லாததால் அவ்வப்போது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. நீளமான டேங்கர் லாரிகள் வந்துவிட்டால் படாதபாடுதான். ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ் நிலையம் அமைத்தால் கடைகள், தொழில் நிறுவனங்கள் தொடங்க வாய்ப்பு உண்டு. இதனால் வருமானம் கிடைக்கும். நகரத்திற்கு அப்பால் பஸ் நிலையமா? என்று கேட்பாரும் உண்டு.
ஆனால் எத்தனையோ இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பஸ் நிலையம் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்கபட்டால் நகரம் வளர்ச்சி அடைவதுடன் வருமானம் அதிகரிக்கும். எனவே நகராட்சி நிர்வாகம் புதிய பஸ் நிலையம் அமைப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மாணவர்கள் பயன் அடைவார்கள்
இது பற்றி சமூக ஆர்வலர் நாகராஜன் கூறியதாவது:-
நகரின் வளர்ச்சிக்கு ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவது அவசியம். இதற்காக தற்போது ராசிபுரத்தில் உள்ள பஸ் நிலையத்தை மாற்ற தேவையில்லை. ராசிபுரத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் ராசிபுரம் பஸ் நிலையம் வந்து ஆண்டகளூர்கேட்டில் அமையவுள்ள புதிய பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும்.
கோவை, ஈரோடு, நாமக்கல் பஸ்கள் ஆண்டகளூர்கேட் வழியாக ராசிபுரம் பஸ்நிலையம் வரவேண்டும். இதன் மூலம் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்கும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்வதால் இங்கு உற்பத்தியாகும் பொருட்களை எளிதாக கொண்டு சென்று விற்க முடியும். தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன் பெறுவர். ராசிபுரம் டவுனுக்கும், ஆண்டகளூர்கேட்டுக்கும் குறுகிய இடைவெளி இருப்பதால் நகரம் வளர்ச்சி அடையும். எனவே ராசிபுரம் நகரம் வளர்ச்சி அடைய ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அதற்கான நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.
தொழில் வளர்ச்சி
வக்கீல் நல்வினை விஸ்வராஜூ கூறியதாவது:-
ராசிபுரம் பழமையான நகரம் என்பதால் குறுகலான பழைய தெருக்கள் எந்த வகையிலும் எதிர்காலத்தில் கூட விரிவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு சிக்கலானவை. நகரத்தின் சாலைகளை அகலப்படுத்துவது என்பது பல்வேறு சட்ட சிக்கல்களை உருவாக்கிவிடும். பொது மக்களுக்கும் தேவையற்ற தொல்லைகளை கொடுத்து விடும். திட்ட மதிப்பீட்டையும் பல மடங்கு அதிகரித்து விடும்.
போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக ராசிபுரம் நகரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்தாலும் கூட, போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு புறவழிச்சாலை நிரந்தர தீர்வாக அமையாது. தினசரி கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ராசிபுரம் நகரின் போக்குவரத்துக்கு கூடுதல் சுமையாக உள்ளது.
ஆண்டகளூர் கேட்டில் புதிய பஸ் நிலையத்தை அமைப்பதன் மூலமாக எவ்வித செலவும் இல்லாமல் புதிய பஸ்கள் இயக்கப்படாமல் ராசிபுரம் நகரத்தை தமிழகத்தின் முக்கிய நகரங்களோடு எளிமையாக இணைக்க முடியும். இது மாணவர்கள் வந்து செல்வதற்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவும். போக்குவரத்து நெரிசலையும் தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.