நரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா?


நரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா?
x

உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட விருத்தாசலம் சாலையில் கடந்த 1984-ம்ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவின் பேரில் நரிக்குறவர் குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு 75 குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் குடியிருப்பு கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

குறிப்பாக வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக கட்டிடங்கள் தற்போது மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து அங்கு வசித்து வந்த பெரும்பாலான நரிக்குறவர்கள் உயிருக்கு பயந்து குடும்பத்துடன் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். வீடுகள் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் அனாதை போல் பஸ் நிலையங்களில் அவர்கள் தற்போது வசித்து வருகின்றனர்.

ஆய்வு

இருப்பினும் சுமார் 5 குடும்பத்தினர் மட்டும் அந்த குடியிருப்பில் உயிரை கையில் பிடித்து கொண்டு வசித்து வருகி்ன்றனர். இதையடுத்து அவர்கள் தங்களுக்கு உடனடியாக புதிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டி தர வேண்டும், அது வரையில் தற்போது உள்ள குடியிருப்புகளை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட அதிகாரிகள், அந்த குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து நரிக்குறவர்களுக்காக அங்கு தற்காலிக வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

நிரந்தர குடியிருப்பு

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஏழுமலை கூறுகையில்,

உளுந்தூர்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. புதிய குடியிருப்பு கட்டி தரக்கோரி அவர்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு நரிக்குறவர்கள் நலன் கருதி தன்னார்வலர்கள் உதவியுடன் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தற்காலிக குடியிருப்புகளை கட்டி வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே எங்களை போன்ற பொதுமக்களின் கோரிக்கையாகும் என்றார்.

வங்கி கடன்

நரிக்குறவர் சங்க தலைவர் ரவி:-

கடந்த 40 ஆண்டுகளாக இதே இடத்தில் வசித்து வரும் எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகாலமாக அரசின் சார்பில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இதை தவிர்க்க நாங்கள் ஏறாத அலுவலகம் இல்லை. பார்க்காத அதிகாரிகள் இல்லை. தற்போது இங்கு தற்காலிக குடியிருப்பு அமைக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இங்கே எங்கள் நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை ஒரு சிலர் ஏமாற்றி அதை அனுபவிக்க முயற்சி செய்கின்றனர். ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து அரசு எங்கள் இடத்தை மீட்டு அனைவருக்கும் இதே இடத்தில் மீண்டும் புதிதாக வீடு கட்டி எங்களை குடியமர்த்த வேண்டும். எங்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்குவதற்காக வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும்.


Next Story