ஆபத்தான பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
ஆபத்தான பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைபாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள அரிச்சந்திரபுரம் கடைவீதியில் இருந்து உச்சுவாடி கிராமத்திற்கு சென்று வருவதற்கு ஏதுவாக வெண்ணாற்றின் குறுக்கே நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தினை வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், உச்சுவாடி, பெரியகொத்தூர், ராமநாதபுரம், மன்னஞ்சி, குலமாணிக்கம், சோலாட்சி, வடவேற்குடி, சேந்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
இந்த பாலத்தின் முகப்பில் ஒரு பக்கத்தில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது. இதனால் பாலத்தின் முகப்பில் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மேலும் பாலமும் அந்தரத்தில் தொங்குவது போல காணப்படுகிறது. பாலத்தின் முகப்பில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரை தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை.
இதனால் பாலத்தின் முகப்பில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்படுகிறது. இதையடுத்து தற்காலிகமாக பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்தாலும், திரும்ப திரும்ப மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்படுகின்றன.
இதனால் பள்ளத்தில் சிலர் விழுந்து காயம் அடைந்தனர். மேலும் இரவு நேரங்களில் பாலத்தில் வருபவர்களும் பள்ளத்தில் விழுகின்றனர்.
புதிதாக கட்டித்தர வேண்டும்
இதனால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தின் முகப்பில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.