கண்காணிப்பு கேமரா கூடுதலாக பொருத்தப்படுமா?


கண்காணிப்பு கேமரா கூடுதலாக பொருத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

கொரோனா பாதிப்பு காலத்தில் சாலை போக்குவரத்து மற்றும் ெரயில் போக்குவரத்து முடங்கிய நிலையில் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் இரு சக்கர வாகன பயன்பாடு அதிகரித்தது.

பாதுகாப்பான இடம்

இதனால் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கிராமப்புறங்களில் உள்ளவர்களும் கூட தவிர்க்க முடியாமல் இரு சக்கர வாகனங்களை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர். அதே நேரத்தில் இருசக்கர வாகனங்களை வாங்கியோர் அதை நிறுத்துவதற்கு பாதுகாப்பான இடம் இல்லாத நிலையில் வீடுகளுக்கு முன்பும், வீடுகளுக்கு அருகே உள்ள பொது இடங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகும் நிலையும் அதிகரித்து விட்டது. வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களும் பொது இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் திருடப்பட்ட சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் கூட சம்பந்தப்பட்ட நபரின் இருசக்கர வாகனத்தை திருடுவது அல்லது அவற்றை தீ வைத்து எரிப்பது போன்ற சம்பவங்களும் நிகழ்வது அதிகரித்து விட்டது.

27 வாகனங்கள் திருட்டு

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் கடந்த மாதம் மட்டும் 27 இருசக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது. இதில் 4 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டாலும் மீதமுள்ள வாகனங்களை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் திருட்டு போன இருசக்கர வாகனம் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு குற்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஒரு மாவட்டத்தில் உள்ள இருசக்கர வாகன திருடர்கள் வேறு மாவட்டத்திற்கு சென்று இருசக்கர வாகனங்களை திருடும் நிலை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனம் வைத்திருப்போரும் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக இரவு நேரங்களில் நிறுத்த வேண்டியது அவசியமாகும். சாதாரணமாக பொது இடங்களில் உரிய பாதுகாப்பில்லாத நிலையில் நிறுத்தி விட்டு செல்வதால் அவை திருட்டு போவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அதிலும் பெரும்பாலானோர் தங்களது இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்திவிட்டு ஏதாவது பணிக்கு செல்லும்போது அவற்றை உரிய முறையில் பூட்டி விட்டு செல்வதில்லை. இதனாலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது அதிகரித்து விட்டது. இதுகுறித்து போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் இருசக்கர வாகன திருட்டை தடுக்கும் வழிமுறைகள் குறித்து போலீஸ் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயக்குமார்:-

இருசக்கர வாகனங்கள் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அதேபோல திருட்டு சம்பவமும் அதிகரித்து விட்டது. இதுபற்றிய புகார்களின் பெயரில் போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் அந்த வாகனங்களை முழுமையாக மீட்கப்படாத நிலையே நீடிக்கிறது.

இதற்கு கண்காணிப்பு கேமரா அனைத்து சாலைகள் மற்றும் சிறு குடியிருப்பு பகுதிகளிலும் பொருத்த வேண்டிய அவசியமாகும். கண்காணிப்பு ேகமரா பதிவு மூலமாக திருடப்படும் இருசக்கர வாகனங்களின் நகர்வுகளை உறுதிப்படுத்தி அதன் மூலம் வாகனத்தை மீட்க வாய்ப்பு ஏற்படும். எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதுகுறித்து ஒவ்வொரு போலீஸ்நிலைய அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கி இருசக்கர வாகன மீட்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

உதிரி பாகங்கள்

ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு குணசுந்தரம்:- கடந்த காலங்களில் இருசக்கர வாகனங்களை திருடுவோர் வழக்கமாக அதனை தொழிலாக கொண்டிருந்தனர். எனவே இருசக்கர வாகனம் திருட்டு போனவுடன் போலீஸ் நிலையங்களில் அவர்களை பற்றிய பதிவு இருக்கும் நிலையில் உடனடியாக கண்டறிந்து வாகனங்கள் மீட்கப்படும். ஆனால் தற்போது இருசக்கர வாகனங்கள் திருடுவோர் ஏதோ பொழுதுபோக்காக திருடுவது போல் திருடி சென்று விடுகின்றனர்.

அதிலும் தற்போது திருடப்படும் இருசக்கர வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்குள் மதுரை போன்ற பெரிய நகரங்களில் இதற்கென உள்ள ஒரு பகுதியில் வாகனங்கள் பிரிக்கப்பட்டு உதிரி பாகங்களாக விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. எனவே இவைகளை கண்டுபிடிக்க முடியாது. மேலும் சிலர் வட மாவட்டங்களில் வாகனங்களை திருடி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குக்கிராமங்களுக்கு கொண்டு வந்து பயன்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர். இதனையும் கண்டுபிடிக்க இயலாது. ஏதேனும் ஒரு குற்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே இது திருடப்பட்ட வாகனம் என்று தெரியவரும். போலீசாரும் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனை தீவிரப் படுத்த வேண்டியது அவசியம். தற்போது வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டால் திருடப்பட்ட வாகனங்களை கண்டறிய வசதியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிலர் இருசக்கர வாகனம் திருடு போனவுடன் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசாரிடம் சான்றிதழ் பெற்று காப்பீட்டு தொகை பெற்றுக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன் பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை மீட்கப்பட்ட கணக்கில் கொண்டு வர வாய்ப்பில்லாமல் போய்விடும்.

கடும் நடவடிக்கை

காரியாபட்டியைச் சேர்ந்த இல்லத்தரசி புஷ்பம்:-

காரியாபட்டி பகுதியில் கடை மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவு திருடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் முழுவதும் விவசாய மற்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தங்கள் வேலைகளுக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளை கடன் வாங்கி வைத்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்களை திருடர்கள் திருடி சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் முழுவதும் கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

ேமாட்டார் சைக்கிள் எரிப்பு

சிவகாசி யோவான் செல்வராஜ்: சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் எரிப்பு சம்பவம் நடை பெற்று வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி பகுதியில் வெளியூர் ஆட்களின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் இதுபோன்ற சம்பவங்களில் யார்? ஈடுபடுகிறார்கள் என்று கூட போலீசாரால் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மோட்டார் சைக்கிள் மாயம் குறித்து புகார் கொடுத்தால் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. திருட்டு சம்பவங்களை தடுக்க முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தால் அந்த நபரை உடனே பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். எனவே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோட்டமிடுதல்

பாளையம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி பிரியங்கா:-

கிராமப்பகுதிகளை விட நகர் பகுதியில் தான் அதிக அளவு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. கடைவீதிகளில் கவனமின்றி நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளை நோட்டமிட்டு திருடி சென்று விடுகின்றனர்.

ஆதலால் நாம் எங்கு சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தினாலும் பக்கவாட்டு பூட்டு பூட்டியுள்ளோமா என ஒரு முறைக்கு இருமுறை சோதிக்க வேண்டும். முடிந்த அளவு மோட்டார் சைக்கிளை நம் கண் பார்வைக்கு தெரியும் வகையில் நிறுத்த வேண்டும் அல்லது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.

சட்டங்களை மாற்ற வேண்டும்

வக்கீல் பாலசந்திரன்:-

காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் வீடுகளின் முன்பும் வணிக நிறுவனங்களின் முன்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக திருடப்பட்டு வருகிறது. அதுவும் சமீபகாலமாக நகரபகுதி மற்றும் கிராமங்களிலும் ஒரு குறிப்பிட்ட மோட்டர் சைக்கிள்களை குறிவைத்து திருடர்கள் திருடி வருகின்றனர்.

திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் குற்றப்பிரிவு போலீசார் நியமிக்க வேண்டும். திருட்டு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. திருட்டு வழக்கில் கைது செய்யப்படும் நபர்களை 3 மாதங்கள் பினையில் வெளிவர முடியாத அளவிற்கு சட்டங்களை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனிப்படை அமைப்பு

போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்:-

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டுக்களை கண்டுபிடித்து வாகனங்களை மீட்டு திருடியவர்களை மீது நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு கோட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் திருட்டு போன இருசக்கர வாகனங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இதனை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து போலீசாருக்கு உரிய ஆலோசனை வழங்கவும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரு சக்கர வாகனம் வைத்துள்ளோர் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் பொழுது இருசக்கர வாகனங்களைஉரிய முறையில் பூட்டி விட்டு செல்ல வேண்டியது அவசியமாகும். குடியிருப்புகளில் வாகனங்களை பாதுகாப்பான முறையில் இரவு நேரங்களில் நிறுத்த வேண்டியதும் அவசியம் ஆகும்.


Next Story