செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கப்படுமா?


செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கப்படுமா?
x

நொய்யலில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள்-பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

செல்லாண்டியம்மன் கோவில்

கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் பங்குனி மாதத்தில் தேர் திருவிழா மற்றும் பூசாரி அப்பன் அரிவாள் மீது ஏறி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி என நான்கு நாட்கள் திருவிழா களைக்கட்டும். இந்த கோவிலுக்கு 18 பட்டி கிராமத்தை சேர்ந்தவர்களும், சுற்று வட்டார பகுதியில் உள்ளவர்களும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். பல்வேறு வேண்டுதலை அம்மன் நிறைவேற்றி தருகிறார் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவில் அருகே நொய்யல் ஆறு, புகழூர் வாய்க்கால் மற்றும் காவிரி ஆறு செல்கிறது.கோவில் அருகே பூங்கா அமைப்பதற்குரிய பெரிய அளவிலான இடம் உள்ளது. இ்ங்கு பூங்கா அமைத்தால் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் வரும் பக்தர்கள் பூங்காவிற்கு சென்று விளையாடி மகிழ்வார்கள். அவ்வாறு செய்தால் இந்த பகுதி சுற்றுலா தலமாக அமைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் சுற்று வட்டார பொதுமக்களின் பொருளாதாரம் மேம்படும். சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சுற்றுலா தலமாக....

இப்பகுதி சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். இங்கு பூங்கா அமைந்தால் பொது மக்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். திருச்சி மாவட்டம் முக்கொம்பு, நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் தடுப்பணை பூங்கா போல இப்பகுதிகளில் பூங்கா அமைத்து பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு பல்வேறு வகையான மிருகங்கள், பறவைகளின் சிலைகளும், சறுக்கு விளையாட்டு சாதனங்கள், குழந்தைகள், பெரியவர்கள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள், பல்வேறு வகையான பூச்செடிகள் மற்றும் அழகான செடிகளை நட்டு வைத்து இப்பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும்.

இந்த பகுதியில் பூங்கா உள்ளிட்டவை அமைத்து சுற்றுலா தலமாக உருவாகும் பட்சம் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் இருந்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்து பொழுதை கழித்து செல்வார்கள்.

கோரிக்கை

அதேபோல் முக்கிய விசேஷ நாட்களில் பொது மக்கள் கூட்டம் அதிகம் வரும். இதனால் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் நல்ல வருவாய் கிடைக்க இது ஏதுவாக இருக்கும். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து கவலைகளை மறந்து தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட்டு பொழுதை கழித்து மகிழ்ச்சியுடன் செல்வர்.எனவே இப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை உயர் அதிகாரிகள் பூங்கா அமைத்து அடிப்படை வசதி செய்து கொடுத்து சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

பூங்கா அவசியம்

குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த அப்பாவு:- நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வருவது வழக்கம். இந்நிலையில் இப்பகுதியில் பூங்கா அமைத்தால் சாமி தரிசனம் முடித்து குழந்தைகளுடன் பூங்காவுக்குள் சென்று விளையாடி மகிழ்ந்து செல்வார்கள்.

காலை மற்றும் மாலை நேரத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர்கள் பெற்றோர்களுடன் சென்று பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். எனவே கோவில் பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொழுதை கழிக்கலாம்

நொய்யல் பகுதியை சேர்ந்த தங்கவேல்:- பல ஆண்டுகளாக நொய்யல் பகுதியில் பரம்பரை பரம்பரையாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். முக்கிய நாட்களில் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் பூங்கா மற்றும் பல்வேறு இயற்கை சூழலுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டி உள்ளது. எங்களுக்கு விவசாயம் நிலம் இருப்பதால் விவசாயத்தை மட்டுமே முழுமையாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். அதனால் அடிக்கடி வெளியூருக்கு செல்ல இயலாது. மனைவி, குழந்தைகளுடன் சுற்றுலாவும் செல்ல இயலாது. இந்த பகுதியில் பல்வேறு வகையான பொருட்களுடன் அதி நவீன பூங்கா அமைத்துக் கொடுத்தால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழிக்க பயனுள்ளதாக இருக்கும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

புங்கோடை பகுதியை சேர்ந்த ராசம்மாள்:- எங்களுக்கு விவசாய தோட்டம் இருக்கிறது. வியாபார கடையும் உள்ளது. எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி எங்களுக்கு பேரன் பேத்திகள் உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். செல்லாண்டியம்மன் கோவில் அருகே பூங்கா அமைத்து கொடுத்தால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். எங்கள் பேரன், பேத்திகளை அங்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் இருந்து பொழுதை கழித்து வருவோம். அருகில் செல்லாண்டியம்மன் கோவில் இருப்பதால் அங்கு சென்று சாமி தரிசனம் செய்து வீடு திரும்பும் போது எங்களுக்கு பெரிய மன நிம்மதியை ஏற்படுத்தி தரும். நாங்கள் கவலையை மறந்து மகிழ்ச்சியோடு இருப்பதற்கு இந்த பூங்கா பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயனுள்ளதாக இருக்கும்

நொய்யல் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி:- நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு விசேஷ நாட்களிலும், தேர் திருவிழாவின் போதும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்வார்கள். இந்நிலையில் அவர்கள் ஆசுவாசப்படுத்தி கொள்ளவும்,பொழுதை கழிக்கவும் பெரிய அளவிலான பூங்கா இருந்தால் மகிழ்ச்சி அடைவர். குழந்தைகளுடன் சென்று பொழுதை கழித்து செல்வார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும்.மேலும் இப்பகுதி சுற்றுலா தலம் ஆனால் உள்ளாட்சி துறைக்கு வருவாயும்,சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story