திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பொள்ளாச்சி
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சிறப்பு ரெயில்
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 7.10 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்து 7.15 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு வந்து பாலக்காட்டுக்கு 8.05 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் ரெயிலில் வழக்கத்தை விட இரு மடங்கு பயணிகள் கூட்டம் இருந்தது. இதனால் ரெயிலில் ஏறி இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்துக்கொண்டு சென்றதை காண முடிந்தது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே திருச்செந்தூர் ரெயிலில் கூடுதலாக ரெயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
நின்று கொண்டு பயணிக்கும் நிலை
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
பாலக்காட்டில் இருந்து காலியாக வரும் ரெயிலில் பொள்ளாச்சியில் இருந்து தான் அதிகளவு பயணிகள் ஏறுகின்றனர். பஸ்களை விட கட்டணம் மிகவும் குறைவு என்பதால் தினமும் சராசரியாக 300 பேர் வரை பொள்ளாச்சியில் இருந்து ரெயிலில் செல்கின்றனர். இதே விடுமுறை நாட்களில் 500 பேர் முதல் 700 பேர் வரை செல்கின்றனர்.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரெயிலை அதிகளவு பயன்படுத்துகின்றனர். மேலும் மதுரை சித்திரை திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களும் திருச்செந்தூர் ரெயிலில் செல்கின்றனர். அதில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கூடுதல் வருவாய்
ஏற்கனவே 14 பெட்டிகளுடன் திருச்செந்தூர் ரெயில் சென்ற நிலையில், தற்போது 12 பெட்டிகளாக குறைக்கப்பட்டு உள்ளது. எனவே கூடுதலாக பெட்டிகளை இணைத்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம். மேலும் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் ரெயிலை இயக்குவதால் எந்த பயனும் இல்லை. எனவே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக இயக்கினால் கோவை மாவட்டத்தில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.
இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் ரெயிலை வெற்றிவேல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.