அரியலூர் பஸ் நிலையம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?


அரியலூர் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் கட்ட தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் பஸ் நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் ஒன்று. இருப்பினும் தமிழக அரசுக்கு கனிம வளங்களின் மூலமாகவும், விவசாய விளை பொருட்கள் மூலமாகவும் வருமானத்தை அள்ளித்தருகின்ற மாவட்டமாக திகழ்கிறது. சுண்ணாம்பு கற்களை கொண்ட பூமியான அரியலூரில் பிரபல சிமெண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட அரியலூர் மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

மாவட்டத்தின் தலைநகராக அமைந்துள்ள அரியலூரில் 3.04 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதனை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்துள்ளார். இந்த பஸ் நிலையம் கடந்த 1975, 1988 மற்றும் 1995-ம் ஆண்டுகளில் 3 கட்டங்களாக கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன.

ரூ.7¾ கோடி நிதி ஒதுக்கீடு

இந்த பஸ் நிலையத்தில் தினசரி 149 அரசு பஸ்களும், 69 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு 77 கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.46 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்தநிலையில் இங்குள்ள கடைகள் சிதிலமடைந்து இருப்பதால் அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. எனவே புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் அங்கு புதிய பஸ்நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.7 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில் புதிதாக கட்டப்படும் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் கட்ட வேண்டும் என்றும், இதற்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

நவீன வசதிகளுடன்...

அரியலூரை சேர்ந்த அசோக்:- அரியலூர் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம் மிகவும் பழுதடைந்ததால் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக அங்கிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தற்சமயம் ஒரு சிறிய நிழற்குடை மட்டுமே உள்ளன. மேலும் இருசக்கர வாகனங்கள் மேற்கூரை இன்றி நிறுத்தப்பட்டு வருகிறது. வெயில் காரணமாக வாகனங்களின் டயர் அடிக்கடி வெடித்து விடுகிறது. இதனால் வெளியூர் சென்றுவிட்டு இரவில் திரும்பும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் பயணிகள் அமர இருக்கை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் முதியோர், கர்ப்பிணிகள் கால்கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. அரியலூர் மாவட்டம் கனிம வளம் மூலம் தமிழக அரசுக்கு அதிக நிதி கொடுக்கிறது. மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கட்டிட வேலைக்கு நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கிறார்கள். அரியலூரில் பஸ்நிலையம் அமைக்க தமிழக அரசு தற்போது ஒதுக்கியுள்ள நிதி மிகவும் குறைவு. எனவே கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்து அரியலூர் பஸ்நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்க வேண்டும்.

கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

அரியலூரை சேர்ந்த அரங்கன் தமிழ்:- மாவட்ட தலைநகரில் பஸ் நிலையம் என்பது தலைநகருக்கான அடையாளம். மாவட்ட மக்களுக்கு பெருமித சின்னம். ஒரு மாவட்ட தலைநகரின் பஸ் நிலையம் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஏனைய தமிழக மாவட்டங்களோடு ஒப்பிட்டால் அரியலூர் பஸ் நிலையம் சராசரியை விட கீழே இருக்கிறது என்று சொல்லலாம். அரியலூர் நகரின் தற்போதைய பஸ் நிலையம் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து, பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பயணம் மேற்கொள்ளும் அவலம், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு ரூ.7¾ கோடி செலவில் பஸ் நிலையம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இருக்காது என்பதே மாவட்ட மக்களின் கருத்தாக உள்ளது. மாவட்டத்தின் தலைநகர் பஸ் நிலையம் அடுத்த 30 ஆண்டுகளின் பயணிகளின் எண்ணிக்கையை எதிர்நோக்கி கட்டப்பட வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அரியலூரில் இருந்து பல பஸ்கள் இயக்கப்பட வாய்ப்பிருக்கிற சூழலில், புதிதாக கட்டப்பட இருக்கும் பஸ் நிலையமும் அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உறுதியாக கட்டப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

கல்லூரி மாணவர் அருள்:- அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், 1,000 ஏக்கர் பரப்பளவை கொண்டு தமிழகத்தில் 20 முதன்மை ஏரிகளில் ஒன்றாக திகழும் சுக்கிரன் ஏரி, காமராசவல்லி கார்கோடேஸ்வரர் கோவில், இயற்கை தொல்படிமங்களை கொண்ட மாளிகை மேடு, கலியுக வரதராஜ பெருமாள் கோவில், ஜி.யு.போப்பால் நிறுவப்பட்ட ஏலாக்குறிச்சி மாதா தேவாலயம் ஆகியவை உள்ளன. இதனால் அரியலூர் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பயணிகளை நம்பி 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். ஆனால் இந்த பஸ்நிலையத்தில் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் நிறுத்துமிடம், கழிவறை உள்ளிட்டவை செய்து தரப்படவில்லை. எனவே புதிதாக கட்டப்படும் பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story