நீர்நிலைகளை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படுமா?


நீர்நிலைகளை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

நீர்நிலைகளை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

நீர்நிலைகளை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போதிய பராமரிப்பு

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனைக்குட்டம் பஞ்சாயத்தில்ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பஞ்சாயத்தை ஒட்டிய பகுதியில் ஆனைக்குட்டம் அணை உள்ளது. இதனால் இங்கு நிலத்தடி நீர் எப்போதும் தேவையான அளவுக்கு உள்ளது.

இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவையான தண்ணீரை பஞ்சாயத்து நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் வினியோகம் செய்து வருகிறது. இதனால் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட நீர்நிலைகளை போதிய பராமரிப்பு இல்லாமல் விட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கிணறுகளை பஞ்சாயத்து நிர்வாகம் கவனிக்காமல் விட்டு விட்டதால் அந்த நீர்நிலைகள் தற்போது குறைந்து விட்டது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குப்பை தொட்டி

அதிலும் குறிப்பாக கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிணறு தற்போது குப்பை தொட்டியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கிணற்றை சுத்தம் செய்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய வாய்ப்பு இருந்தும் பஞ்சாயத்து நிர்வாகம் அதில் கவனம் செலுத்தாமல் அந்த கிணற்றை குப்பை தொட்டியாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

குப்பைகள் நிரம்பியவுடன் தீ வைத்து எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் புதிய கிணறுகள் அமைக்கவும் ஏற்பாடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல இடங்களில் வாருகால் வசதி இல்லாமல் கழிவுநீர் சாலையில் ஓடும் நிலை உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

சிவகாசி யூனியன் அதிகாரிகளும், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் ஆனைக்குட்டம் பஞ்சாயத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து நீர்நிலைகளையும், பூட்டி கிடக்கும் கழிவறைகளையும் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story