பழையாறு அலையாத்திகாடு சுற்றுலா தலமாக்கப்படுமா?


100 வகை பறவை இனங்கள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வரும் பழையாறு அலையாத்திகாடு சுற்றுலா தலமாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

100 வகை பறவை இனங்கள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வரும் பழையாறு அலையாத்திகாடு சுற்றுலா தலமாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அலையாடுத்தி காடு

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் வங்கக்கடலில் கலக்கும் இடங்களில் அதிக அளவில் அலையாத்திகாடு் உள்ளன. அதில் குறிப்பாக கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன.

அதற்கு அடுத்தபடியாக மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு கடலோரப் பகுதிகளில் அதிகளவில் அலையாத்தி காடு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமாக பழையாறு மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது.

20 கிலோ மீட்டர் தூரம்

இப்பகுதியை சுற்றி கொடியம்பாளையம் தீவு, கோட்டைமேடு, மடவாமேடு, காட்டூர், ஆகிய கிராமங்களில் கடல்நீர் மற்றும் காவிரிநீர் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. இப்பகுதி நீண்ட நிலப்பரப்புகளை கொண்ட உவர் நீர் கலந்த பகுதியாக காணப்படுகிறது. பழையாறு கடற்கரையில் 20 கிலோமீட்டர் தூரம் அதிக அளவில் அலையாத்திகாடு பசுமையாக காட்சியளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த அலையாத்திகாடு மீனவர்களின் நண்பனாகவும், இயற்கை சீற்றத்தை தடுக்கும் அரணாகவும் திகழ்ந்து வருகிறது. அலையாத்தி மரங்கள் வங்கக்கடலின் கரையோர பகுதிகளில் உவர்நீர் கலந்த தண்ணீர் மேல் மிதந்து வளரக்கூடிய தன்மை உடையது. திட்டு திட்டாக தீவு போன்றும், மலைகள் போன்றும் அலையாத்திகாடு அடர்ந்து காணப்படுகிறது.

100 வகை பறவை இனங்கள்

இந்த காடு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பிராண வாய்வு குறைவாக உள்ள இடங்களில் அதிக அளவில் வளரும் தன்மை உடையது. இந்த காட்டில் உள்ள மரத்தின் வேர் பகுதியில் காய்கள் நீண்ட வடிவில் முருங்கைக்காய் போன்று இருக்கும். இந்த அலையாத்தி காடுகளில் 100-க்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த பறவை வாழ்ந்து வருகின்றன. இந்த அலையாத்திகாட்டை மேம்படுத்தி படகு வசதியுடன் சுற்றுலா தலமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும்மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கையை பாதுகாக்கும் அரண்

இதுகுறித்து பழையார் கிராமத்தைச் சேர்ந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,. உலக அளவில் கடலோரப் பகுதிகளில் காடு வளர்ப்பை அதிகரிக்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வங்க கடலோர பகுதியான பிச்சாவரம் காடு வளர்ப்பில் முதலிடத்தில் உள்ளது.

அதனை ஒட்டிய பகுதியான பழையாறு சுற்று வட்டார பகுதிகளில் அலையாத்தி காடு உள்ளது. நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இயற்கையை பாதுகாக்கும் அரணாக அலையாத்தி காடு அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடிகால் பகுதி மற்றும் வங்கக்கடல் இடையே அலையாத்தி காடு வளர்ந்து கடலோரம் உள்ள தீவு கிராமங்களை பாதுகாத்து வருகிறது. இதனால் பழையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் காடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையை பாதுகாக்கும் வகையில் அலையாத்தி காடுகளின் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சுற்றுலா தலமாக்க வேண்டும்

பழையார் கிராமத்தைச் சேர்ந்த உதயன் கூறுகையில், பழையாறு மீன்பிடித் துறைமுகம் இயற்கை துறைமுகமாக திகழ்ந்து வருகிறது. கொள்ளிடம் ஆறு வங்கக் கடலில் கலக்கும் இடமாக திகழ்ந்து வருகிறது. அலையாத்தி காட்டில் 15 வகையான மரங்கள் உள்ளன. சுனாமி ஏற்பட்ட போது அலையாத்தி காடு அரணாக இருந்தது.கடல் பகுதியில் பவளப்பாறைகள் உருவாவதற்கு இந்த காடுகளின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கடல் சீற்றத்தினால் ஏற்படும் மணல் அரிப்பை தடுப்பதற்கு இந்த காடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மீன்களின் இனப்பெருக்கத்திற்கும், கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கும் அலையாத்தி காடு உதவுகிறது. காடுகள் உள்ள பகுதிகளில் கல் நண்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. பழையாறு கடலோரப் பகுதியில் உள்ள அலையாத்தி காட்டை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story