ஆற்கவாடியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?


ஆற்கவாடியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
x
தினத்தந்தி 15 April 2023 6:45 PM GMT (Updated: 15 April 2023 6:46 PM GMT)

ஆற்கவாடியில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆற்கவாடி கிராமம். இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆற்கவாடி மேற்கு தெரு பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றுவதற்காக கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அங்கு மேற்கொண்டு பணிகளை செய்யாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அவ்வழியாக செல்பவர்கள் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.

காட்சி பொருளான மினிகுடிநீர் தொட்டி

இது ஒருபுறம் இருக்க கிழக்கு தெருவில் சாலையோரத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அப்பகுதி மக்கள், சவுக்கு கழி மூலம் தற்காலிகமாக மின்கம்பியை உயர்த்தி கட்டியுள்ளனர். இருப்பினும் அவ்வழியாக செல்பவர்கள் ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். இது தவிர.அரும்புரம்பட்டு செல்லும் சாலையில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அதனை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால், மினிகுடிநீர் தொட்டி சேதமடைந்து கடந்த பல மாதங்களாக காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள நகர் பகுதிகளுக்கு அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணம் வீண்

மேலும் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார வளாக கட்டிடமும் பலத்த சேதமடைந்து காணப்படுவதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சேதமடைந்த சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது. பணி முடிந்தும் பல மாதங்கள் ஆனபின்பும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுகாதார வளாக கட்டிடம் மீண்டும் சேதமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. ஆற்கவாடி பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், அதன் பயன்கள் பொதுமக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை தவிர்க்க ஆற்கவாடி கிராமத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கவும், கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ள சுகாதார வளாகம், மினி குடிநீர் தொட்டியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின்கம்பியை உயர்த்தி அமைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Next Story