செஞ்சி பி ஏரியில் படகு சவாரி தொடங்கப்படுமா?


செஞ்சி பி ஏரியில் படகு சவாரி தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 17 Jan 2023 6:45 PM GMT (Updated: 17 Jan 2023 6:47 PM GMT)

செஞ்சி பி ஏரியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவது செஞ்சி கோட்டையாகும். இக்கோட்டையை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள். சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு களித்த இடங்களில் இந்தியாவில் மாமல்லபுரத்துக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தை செஞ்சிக்கோட்டை பிடித்துள்ளது.

செஞ்சி கோட்டையை பராமரிக்கும் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இருந்தது இருந்தபடியே என்ற நிலையில் பழமை மாறாமல் கோட்டையை பராமரிப்பதோடு, அடிப்படை வசதிகள் சிலவற்றை மட்டுமே செய்து வருகின்றனர்.

மேலும் செஞ்சிக்கோட்டை வளாகத்தில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சர்க்கரை குளம், செட்டிகுளம் என 2 குளங்கள் உள்ளன. அவைகள் படகு சவாரிக்கு தகுதி வாய்ந்தவையாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசு மூலம் படகு சவாரி ஏற்படுத்த யாரும் முயற்சிகள் மேற்கொள்ளாததால் அதற்கான கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை

இச்சிறப்பு வாய்ந்த செஞ்சி கோட்டை அமைந்துள்ள இடத்தின் அருகில் செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் பி ஏரி அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் இருப்பதால் படகு சவாரி செய்ய ஏற்ற இடமாக பி ஏரி விளங்கி வருகிறது. தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் முயற்சியால் பி ஏரியில் ரூ.1 கோடியே 93 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது தேர்தல் அறிக்கையில் செஞ்சி பி ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி பீ ஏரியில் படகு சவாரி ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த கோரிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் செஞ்சி பி ஏரியில் படகு சவாரி ஏற்படுத்துவது குறித்து சுற்றுலாத் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்படும் என செஞ்சி பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து செஞ்சி பகுதி மக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

நம்பிக்கை

செஞ்சி தாலுகா வர்த்தக சங்க தலைவர் ஆர்.செல்வராஜ்: செஞ்சி பி ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் தன்னார்வலர்கள் மூலமாக அகற்றப்பட்டதன் காரணமாக தற்போது ஏரியில் அதிக அளவில் மழை நீரை தேக்கி வைக்க முடிகின்றது. இதனால் ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருக்கிறது.எனவே அமைச்சர் செஞ்சி மஸ்தான் மனது வைத்தால் விரைவில் செஞ்சி பி ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த அனுமதி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்

அப்பம்பட்டை சேர்ந்த அய்யாதுரை:-

பல வருடங்களாக செஞ்சியில் மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களே இருந்து வந்ததால் ஆளுங்கட்சியால் செஞ்சி புறக்கணிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். எனவே அவர்கள் செஞ்சி பீ ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். அவ்வாறு பீ ஏரியில் படகு சவாரி ஏற்படுத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதன் மூலம் செஞ்சி வளர்ச்சி பெற்ற நகரமாக மாறுவதற்கு முதல் படியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வருவாய் அதிகரிக்கும்

செஞ்சியை சேர்ந்த குமார்:- செஞ்சி பீ ஏரி பேரூராட்சி எல்லைக்குட்பட்டதாகும். இங்கு படகு சவாரி ஏற்படுத்துவதன் மூலம் பேரூராட்சியின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே பீ ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story