சின்னாறு நீர்த்தேக்கம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சுற்றுலா தலமாக்கப்படுமா?


சின்னாறு நீர்த்தேக்கம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சுற்றுலா தலமாக்கப்படுமா?
x

சின்னாறு நீர்த்தேக்கம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சுற்றுலா தலமாக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

காமராஜர்-கக்கன் திறந்து வைத்தனர்

வறண்ட பூமியான பெரம்பலூரை வளப்படுத்த 1957-ம் ஆண்டில் அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர், சென்னை மாகாண மராமத்து இலாகா அமைச்சர் கக்கன் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையுடன், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த பெரம்பலூரில் முதன்முதலில் உருவாக்கப்பட்டதுதான் சின்னாறு செயற்கை நீர்த்தேக்க திட்டம். இதன்படி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையைெயாட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சின்னாறு எனும் இடத்தில் சின்னாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர் வள ஆதார துறையின் சார்பில் சின்னாறு நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1958-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி காமராஜர், கக்கனால் சின்னாறு நீர்த்தேக்கம் திறந்து வைக்கப்பட்டது.

716 ஏக்கர் விவசாய நிலங்கள்

மழை காலத்தில் பச்சைமலையில் இருந்து வரும் காட்டாற்று தண்ணீரை சேமித்து வைத்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் காமராஜர் இந்த சின்னாறு நீர்த்தேக்க திட்டத்தை கொண்டு வந்தார். கோனேரி ஆறு, வேதநதி ஆகியவற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீரானது இந்த நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

எறையூர், பெருமத்தூர், பெண்ணகோணம் ஆகிய கிராமங்களில் உள்ள 716 ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்கு பாசனம் தரும் வகையிலும், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும் அமைக்கப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கம் தற்போது பராமரிப்பின்றி அடையாளம் இழந்து காணப்படுகிறது.

சுற்றுலா தலமாக இருந்தது

இந்த நீர்த்தேக்கம் ஒரு காலத்தில் பாசனத்துக்கு மட்டுமின்றி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான சுற்றுலா தலமாகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது, இந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. மேலும் நீர்த்தேக்கம் அருகே பயணியர் மாளிகையும், அதனை சுற்றி பூங்காவும் இருந்தது. தற்போது பயணியர் மாளிகை பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. பூங்கா இருந்ததற்கான அடையாளமே இல்லை.

இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் சின்னாறு நீர்த்தேக்கம் இல்லாமல் போகும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சின்னாறு பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு புதுப்பித்து, மீண்டும் பயணியர் மாளிகை, பூங்காவை அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story