திண்டுக்கல்லில் நகர் சுற்று பஸ் இயக்கப்படுமா?


திண்டுக்கல்லில் நகர் சுற்று பஸ் இயக்கப்படுமா?
x

திண்டுக்கல்லில் நகர் சுற்று பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல்

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். மதுரை, கோவை, திருச்சி போன்று பெரிய நகராக இல்லாவிட்டாலும் மாநகராட்சி அந்தஸ்தை பெற்றுவிட்ட ஊர் திண்டுக்கல். அதற்கு திண்டுக்கல் பெற்று வரும் வளர்ச்சியே காரணம்.

2½ லட்சம் மக்கள்

வரலாற்று சின்னங்களை தன்னகத்தே கொண்ட திண்டுக்கல் நகரில் சுமார் 2½ லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அனைத்து தரப்பு மக்களும் வாழும் நகராக விளங்குகிறது. இங்கு காந்தி மார்க்கெட், பெரிய ஜவுளி நிறுவனங்கள், மொத்த பலசரக்கு கடைகள், கமிஷன் மண்டிகள், இதர வர்த்தக நிறுவனங்கள், வங்கி தலைமை அலுவலகங்கள் என நகரமே வர்த்தக மையமாக திகழ்கிறது.

இதனால் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் திண்டுக்கல் நகரமே ஸ்தம்பித்து விடும் அளவுக்கு திரளும் மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி ஆகும்.

பள்ளி, கல்லூரி

இதுதவிர தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை மொத்தம் 105 பள்ளிக்கூடங்கள் உள்ளன. அதேபோல் 2 மகளிர் கலைக்கல்லூரிகளில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பல்வேறு கல்வி பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆட்டோ, வேன்கள், பெற்றோரின் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் சப்-கலெக்டர் அலுவலக சாலை, ஜி.டி.என்.சாலை, சவேரியார்பாளையம் பகுதியில் காலை, மாலை நேரத்தில் நெரிசல் ஏற்படுவதை பார்க்கலாம்.

ஆஸ்பத்திரிகள்-வழிபாட்டு தலங்கள்

இதற்கெல்லாம் மேல் நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி இருக்கிறது. இங்கு தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுதவிர கமலாநேரு ஆஸ்பத்திரி, நகர்நல மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என அவசர கால சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளும் அதிகம்.

எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக திண்டுக்கல்லில் செயல்படும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர். அதேபோல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், பெரிய பள்ளிவாசல், புனித வளனார் பேராலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் என பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளன.

பஸ் வசதி

இதனால் உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமின்றி மனநலத்தை பேணுவதற்கும் திண்டுக்கல்லுக்கு மக்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் திண்டுக்கல் முழுவதும் பக்தி பரவசமாக இருப்பதை உணரலாம். எனவே விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பக்தர்கள், மாணவர்கள் என தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நகரில் வலம் வருகின்றனர்.

அதேநேரம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி மார்க்கெட், கடைவீதி, வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையம், பள்ளி மற்றும் கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள் என எங்கு செல்ல வேண்டும் என்றாலும் பஸ் வசதி இல்லை. இவர்கள் நகரில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு சொந்த வாகனம், வாடகை வாகனங்களில் தான் செல்ல வேண்டியது இருக்கிறது.

நகர் சுற்று பஸ்

இந்த குறையை போக்குவதற்கு இதர நகரங்களை போன்று நகர் முழுவதும் வலம் வரும் வகையில் நகர்சுற்று பஸ்களை இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. பஸ்நிலையத்தில் இருந்து மார்க்கெட், பள்ளி, கல்லூரி, உழவர்சந்தை, ஆஸ்பத்திரிகள், ரெயில் நிலையம் வழியாக பஸ்களை இயக்கினால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.

அதேபோல் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே பொதுமக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட, மாநகராட்சி, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story