பெண்கள்-குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவேன்-பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
பெண்கள்-குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க பாடுபடுவேன் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி தெரிவித்தார்.
பணியிட மாறுதல்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த மணியை சென்னை தாம்பரம் போலீஸ் தலைமையகம் மற்றும் நிர்வாகம் துணை கமிஷனராகவும், சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஷியாம்ளா தேவியை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ஷியாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அவரிடம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய மணி பொறுப்புகளை ஒப்படைத்து சென்றார்.
பொறுப்பேற்பு
இதையடுத்து ஷியாம்ளா தேவி தனது அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவருக்கு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஷியாம்ளா தேவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் ஏற்கனவே நான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றியதால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பாடுபடுவேன்.
சமூக விரோதிகள் இல்லாத மாவட்டமாக...
சாலை விபத்தில்லா மாவட்டமாகவும், சமூக விரோதிகள் இல்லாத மாவட்டமாகவும் பெரம்பலூரை உருவாக்குவதற்கும் நான் என்னுடைய காவல் துறையினருடன் மட்டுமல்லாமல், மற்ற துறை அலுவலர்களுடன் இணைந்து பாடுபடுவேன். மேலும் மாவட்டத்தில் சாதி ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
தகவல் தெரிவிக்கலாம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்க போலீஸ் அலுவலகத்தை 100 என்ற இலவச தொலைபேசி எண்ணையும், 9498100690 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்களை பற்றிய விவரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
6-வது பெண் அதிகாரி...
பெரம்பலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற ஷியாம்ளா தேவிக்கு சொந்த ஊர் சிவகங்கை ஆகும். பி.எஸ்.சி. விவசாயம், எம்.எஸ்.சி. வனவியல் படித்துள்ள இவர் குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நேரடியாக போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிக்கு சேர்ந்தார். மேலும் அவர் உதவி கமிஷனராகவும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும், துணை கமிஷனராகவும் பணிபுரிந்து, தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கட்டுப்பாட்டுக்குள் வந்த பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தேன்மொழி, வனிதா, சோனல் சந்திரா, திஷா மித்தல், நிஷா பார்த்திபன் ஆகிய 5 பெண்கள் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றி சென்றுள்ளனர். தற்போது 6-வதாக ஷியாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார்.