அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா?


அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா?
x

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி

நாய்கடிக்கு தடுப்பூசி

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் பணியாளர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களை நாய்கள் துரத்துகின்றன. இதனால் இரவில் அச்சத்துடனேயே அவர்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் பகல் நேரங்களிலும் தெருக்களில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துகின்றன. குழந்தைகளுடன் செல்லும் பெண்கள், சிறுவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற நிலையே மாவட்ட பகுதிகளிலும் உள்ளது.

சில சமயங்களில் தெருக்களில் செல்பவர்களை நாய்கள் கடித்து குதறிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. அவ்வாறு நாய் கடிபட்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது திருச்சி அரசு மருத்துவமனைக்கோ சென்று நாய்கடிக்கான தடுப்பூசியை போட்டு செல்கின்றனர். மேலும் தினமும் தடுப்பூசி செலுத்த பலர் வருகின்றனர்.

தடுப்பூசி

இது தொடர்பாக அரசு மருத்துவமனை டாக்டர் சதீஸ்குமார் கூறுகையில், வெறிநாய் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய், குட்டி நாய், தெருநாய் என எந்த நாய் கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்துகிறது. நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீர், அக்காயத்தின் வழியாக 'ரேபிஸ்' எனப்படும் வெறிநோய் கிருமிகளை உள்ளே செலுத்துகிறது. எனவே நாய் கடித்தவுடன், கடிபட்ட இடத்தை ஓடும் நீரில் அதாவது குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள் நன்கு ரத்தம் வெளியேறும் வரை கழுவ வேண்டும். கழுவும்போது சோப்புகளை உபயோகப்படுத்த வேண்டும்.

பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று ஏ.ஆர்.வி. எனும் தடுப்பூசி செலுத்த வேண்டும். நாய் கடித்த முதல் நாள், 3-வது நாள், 7-வது நாள், 14-வது நாள், 28-வது நாள் என 5 முறை தடுப்பூசி போட வேண்டும். முதல் தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு நிறுத்திவிடக்கூடாது. வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சைகளை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். திருச்சி அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் வெறிநாய் கடிக்கு போதிய மருந்து இருப்பு உள்ளது, என்றார்.

சிறுவர்கள் அதிகம் பாதிப்பு

பீமநகரை சேர்ந்த தயாநிதி பெர்னார்டு கூறுகையில், எங்கள் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் நாய்கள் துரத்தி கட்டிக்க வருகின்றன. இதில் பெரும்பாலும் சிறுவர்களை நாய்கள் கடித்து விடுகின்றன. நாய்கடி பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் கூறுகையில், தெரு நாய்கள் தொல்லையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். இது குறித்து மாநகராட்சியில் புகார் கொடுத்தால், பணியாளர்கள் வந்து நாய்களை பிடித்து செல்கின்றனர். பின்னர் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்து மீண்டும் அதே பகுதியில் விட்டு விடுகின்றனர். இதனால் தெருக்களில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும், என்றார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்...

தொட்டியம் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள ஆர்.ரவிக்குமார் கூறுகையில், தொட்டியம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் நாய்களை பிடிக்கவில்லை. அவ்வப்போது சாலையில் செல்லும் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை நாய்கள் கடிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. ஒரு சில நேரங்களில் பல்வேறு பகுதிகளில் நாய் கடிபட்டவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் தடுப்பூசி போட வருவதால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கான தடுப்பூசி மருந்துகளை இருப்பு வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டும், என்றார்.

துறையூர் பகுதியை சேர்ந்த நித்தியாசரவணன் கூறுகையில், துறையூர் நகராட்சி பகுதியில் 24 வார்டுகளிலும் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சிறுமிகளை கடித்த சம்பவம் நடந்துள்ளது. நாய்கடிபட்டவர்களுக்கு துறையூர் அரசு மருத்துவமனையில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி கூறுகிறார்கள். இதனால் நாய்கடிபட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து எந்த நேரத்திலும் இந்த மருத்துவனையில் நாய்கடிக்கு தடுப்பூசி செலுத்தவும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Next Story