பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வாரா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: அண்ணாமலை கேள்வி
அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை விசாரிக்க, ஐகோர்ட் தடை விதிக்க மறுத்துள்ள நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அண்ணாலை கூறியுள்ளார்.
சென்னை,
2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தது.
எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம சிகாமணி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
'அலமாரியில் இருந்து எலும்புக்கூடுகள் வெளியேறுவது போல்', தி.மு.க., அமைச்சர்களின் ஊழல், ஒவ்வொரு வாரமும், அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தி.மு.க., ஆட்சிகாலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் பலர் மீது தொடரப்பட்ட வழக்குக்கு, தடை விதிக்க, ஐகோர்ட் மறுத்துள்ளது.
முந்தைய தி,மு.க., ஆட்சியின்போது, பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா மற்றும் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர், பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களை போல், பொன்முடியை அமைச்சரவையில் இருந்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நீக்கம் செய்வாரா அல்லது செந்தில் பாலாஜியை பாதுகாப்பது போல், பாதுகாப்பாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.