சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் சேலம் மாநகராட்சி 6-வது வார்டில் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

சேலம்

அஸ்தம்பட்டி மண்டலம்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 6-வது வார்டு பகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். 15 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சி தேர்தலில் 6-வது வார்டில் போட்டியிட்டு 1,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலரான ராமச்சந்திரன், தற்போது சேலம் மாநகராட்சி மேயராக உள்ளார். கூலித்தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள் இந்த வார்டில் உள்ளனர். கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த வார்டில் 2 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

ஏற்காடு அடிவார பகுதியில் வார்டு உள்ளதால் கரடுகள் அதிகம் உள்ளன. பெரியார் நகர், தந்தை பெரியார் நகர், பொன்னுசாமி கவுண்டர் காடு உள்ளிட்ட பல இடங்கள் மேடான பகுதியாக இருந்தாலும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. சாக்கடை கால்வாய் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு இந்த வார்டு வழியாக தான் பிரதான சாலை செல்கிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வார்டு வழியாக சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் பயணிக்கின்றன. இதனால் எப்போதும் இந்த ரோடு பரபரப்பாகவே காணப்படும். சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் வர்மா கார்டன் பகுதியில் எப்போதும் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் அணிவகுக்கும் நேரத்தில் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த வார்டு பகுதி மக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது வார்டு பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சாக்கடை கால்வாய்

கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் சிவானந்தம்:-

நான் கடந்த 25 ஆண்டுகளாக சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறேன். கடந்த காலங்களில் இந்த பகுதியில் இருந்த ஓடை வழியாக சாக்கடை கழிவுநீர் வெளியேறிவிடும். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஓடையில் மீன் பிடித்ததாக முதியவர்கள் கூறுகின்றனர். தற்போது அந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடனே பயணிக்கின்றனர்.

சாக்கடை கழிவுநீர் தேங்காமல் இருக்க சாலையோரம் இரு புறங்களிலும் சாக்கடை கால்வாய் கட்டும் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் சாலையோரம் குழி தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் முடிக்கப்படாததால், கடை வைத்து இருந்த பலர் அதனை மூடி விட்டனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடித்து, சாலையை புதுப்பிக்க வேண்டும்.

தந்தை பெரியார் நகரை சேர்ந்த சர்மிளா:-

தந்தை பெரியார் நகர் மேடான பகுதி. அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 3 மாதத்திற்கு முன்பு இந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. அப்போது ஒரு புறம் மேடாக சாலை அமைத்து விட்டனர். இதனால் தாழ்வாக உள்ள எதிர்புறம் வீடுகள் முன்பு மழை நீர், சாக்கடை கழிவுநீர் தேங்கிவிடுகிறது. எனவே சாலையை சமப்படுத்தி கொடுக்க வேண்டும்.

வேகத்தடை

அய்யங்கரடு பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவி செல்வி:-

சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் இருந்து தந்தை பெரியார் நகர் சாலை வழியாகத்தான் என்.ஜி.ஓ. காலனி, கோம்பைக்காடு, அய்யங்கரடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். என்.ஜி.ஓ. காலனி, அய்யங்கரடு பிரிவு சாலையில் 2 குடிநீர் கேட்வால்வுகள் உள்ளன. இந்த கேட்வால்வுகள் அமைந்துள்ள இரும்பு குழாய் சாலையில் வெளியே தெரியும் படி உள்ளது. மேலும் பெரிய வேகத்தடை உள்ளது. வேகத்தடையையொட்டி சாக்கடை கால்வாய் செல்கிறது.

இதனால் இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் திரும்பும் போது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சாலையின் நடுவே அமைக்கப்பட்டு உள்ள வேகத்தடையை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

மூதாட்டி தங்கம்மாள்:-

பொன்னுசாமி கவுண்டர் கரடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் எங்களுக்கு மேட்டூர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் குடிநீர் குழாயின் கேட் வால்வு அமைக்கப்பட்டு உள்ள இடம் முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கேட் வால்வு சாக்கடை கழிவுநீரில் மூழ்கி தான் உள்ளது. இதனால் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே கேட் வால்வு உள்ள பகுதியில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யங்கரடு செல்லும் சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பாசிபடர்ந்து காணப்படுகிறது. இது என்னை போன்ற மூதாட்டிகளுக்கு சாலையில் நடக்க சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே கழிவுநீர் சாலையில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்கா சீரமைப்பு

ஓய்வு பெற்ற தபால் சூப்பிரண்டு கனகராஜன்:-

வர்மா கார்டன் பகுதியில் திருவள்ளுவர் பூங்கா உள்ளது. பூங்காவின் ஓரத்தில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதால் பூங்காவின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பூங்காவிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, பூங்காவை சீரமைத்து புத்தொளியுடன் திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேயர் ராமச்சந்திரன் கருத்து

6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், மாநகராட்சி மேயருமான ராமச்சந்திரன் கூறியதாவது:-

மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் கரட்டு பகுதியில் உள்ளவர்கள் மட்டுமின்றி வார்டு பகுதி மக்கள் அனைவருக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து உள்ளேன். பெரிய கொல்லப்பட்டி உள்ளிட்ட 2 இடங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து உள்ளேன். வார்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி 70 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. மீதி உள்ள 30 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும். சேலம்-ஏற்காடு சாலையோரம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு, கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் ஒரு வருடத்தில் அடிப்படை வசதி உள்ளிட்ட அனைத்திலும் தன்னிறைவு பெற்ற வார்டாக 6-வது வார்டை மாற்றிக்காட்டுவேன்.

அதே போன்று 2 ஆண்டுகளில் சேலத்தை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். மாநகராட்சியில் பூங்கா அமைக்க ஏதுவாக உள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மூலிகை செடிகள், சிறுவர் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள் அமைக்கப்படும். மாநகராட்சியில் நிதியை பெருக்க நிலுவையில் உள்ள வரி தொகையை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிலுவை வரியை செலுத்தவில்லை என்றால் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை இருந்த சேலம் மாநகராட்சி வேறு. இனி மக்கள் பார்க்கப்போகும் மாநகராட்சி வேறு. அந்த அளவில் தீவிரமாக மக்கள் பணியாற்றி வருகிறேன். மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்களுடன் இணைந்து சேலம் மாநகராட்சியை தொடர்ந்து முதன்மை மாநகராட்சியாக கொண்டு வர உழைப்பேன்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.12½ கோடி ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. அவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும். மாநகராட்சி பகுதியில் ரூ.530 கோடியில் பாதாள சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தப்படும். தங்குதடையின்றி குடிநீர் கிடைக்க ரூ.158 கோடியில் கூடுதல் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

* விரைந்து முடிக்க வேண்டிய சாக்கடை கால்வாய் பணி

* சாலையில் தேங்கும் கழிவுநீர் அகற்றம்

* சாலை சீரமைப்பு

* வேகத்தடை அகற்றம்

* பூங்கா சீரமைப்பு


Next Story