திருமணஞ்சேரி கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
திருமணஞ்சேரி கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சுகந்த பரிமளேஸ்வரர் கோவில்
கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் பிரசித்தி பெற்ற சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நூற்றாண்டில் சோழ, சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில் திருவிளையாடல் புராணத்தில் பாடப்பட்ட சைவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் இந்த கோவில் திகழ்கிறது.
இதுதவிர விஷம் முறிக்கும் வினோத கோவில் என்ற பெருமையும் உண்டு. இந்த கோவிலை சுற்றி 10 கி.மீ. சுற்றளவுக்கு யாரையும் விஷ ஜந்துகள் கடிப்பதில்லை. விஷம் தீண்டி இங்கு வருபவர்கள் ஆரோக்கியம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அடிப்படை வசதிகள்
சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ் வருட பிறப்பு, சனி பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ஆடிப்பெருக்கு, சிவராத்திரி, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள், காதணி விழாக்கள், 60-ம் ஆண்டு மணிவிழா, 80-ம் ஆண்டு நிறைவு முத்து விழா போன்றவை இங்கு நடைபெற்று வருகிறது. பல்வேறு சிறப்பு மிகுந்த இந்த கோவிலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இந்த கோவில் உள்ள வழித்தடத்தில் ஒரு அரசு பஸ், ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இவையும் சரிவர இயக்கப்படுவது இல்லை. இதனால் போதிய போக்குவரத்து வசதி இன்றி பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை, தெரு விளக்கு, சுகாதாரம் போன்ற வசதிகள் இல்லாத நிலை உள்ளது. எனவே திருமணஞ்சேரி கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
சமுதாய கூடம்
கருக்காகுறிச்சியை சேர்ந்த சங்கர்:- காசிக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த கோவிலில் உள்ள சிவன் மற்றும் அம்பாளை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கோவிலில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தோஷ நிவர்த்திக்காக வரும் பக்தர்கள் கோடை காலங்களில் கோவில் குளத்தில் தண்ணீர் இல்லாததால் வேதனைபடுகின்றனர். எனவே கோவில் திருக்குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து எப்போதும் தண்ணீர் இருக்கும் நிலையை உருவாக்கி சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். விசேஷ நிகழ்வுகள் இங்கு அதிகம் நடைபெறுவதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்.
மகளிர் சுகாதார வளாகம்
மஞ்சுவிடுதியை சேர்ந்த கருப்பையா:- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி தற்போது பழுதடைந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள், தோஷ நிவர்த்திக்காக கோவிலில் தங்கும் பக்தர்கள் என பலரும் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை உடனே மராமத்து செய்து பராமரிக்க வேண்டும். கோவிலை சுற்றி குப்பை கூழங்கள் அதிகம் தேங்குகின்றன. எனவே கோவிலில் தனியாக தூய்மை பணியாளர் நியமிக்க வேண்டும்.
அன்னதான கூடம்
திருமணஞ்சேரியை சேர்ந்த பிரகதீஸ்:- கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தோஷம் கழிப்பதற்காக 7 முதல் 48 நாட்கள் வரை பலர் கோவிலில் தங்கி செல்கின்றனர். ஆனால் அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் 50 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே தினமும் 100 பேருக்கும், சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதல் பேருக்கும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலில் சேதமடைந்து பழுதடைந்து உள்ள அன்னதான கூடத்தை புனரமைக்க வேண்டும். குளத்தில் குளிக்கும் பெண் பக்தர்கள் உடைமாற்றும் தனி அறை கட்டவேண்டும்.
உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்
சேதுமாதவன்:- கறம்பக்குடி விலக்கு சாலையில் தொடங்கி திருமணஞ்சேரி கோவில் வரை உள்ள சாலை மிக மோசமாக உள்ளன. அக்னி ஆற்றின் தரை பாலமும் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமப்படுகின்றனர். கோவிலில் இரவு தங்கி செல்வதற்கு பக்தர்கள் வருகின்றனர். ஆனால் தெரு விளக்குகள் எரியாமல் சாலை இருண்டு கிடப்பதால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே திருமணஞ்சேரி சாலையை அகலப்படுத்தவும், தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.