'சென்ட்' தொழிற்சாலை அமைக்கப்படுமா?


சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 14 March 2023 1:00 AM IST (Updated: 14 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எருமப்பட்டி:-

எருமப்பட்டி வட்டாரத்தில் பூக்கள் விவசாயம் அதிகஅளவில் நடைபெறுவதால் 'சென்ட்' தொழிற்சாலை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

பூக்கள் விவசாயம்

நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி வட்டாரத்தில் தான் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்படுகின்றன. இதனால் எந்த விவசாய தோட்டத்திற்கு சென்றாலும் நறுமணம் வீசுகிறது. குறிப்பாக அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, பொன்னேரி, போடிநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை, காளிசெட்டிப்பட்டி, மேட்டுப்பட்டி கோடங்கிபட்டி, வடுகப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்கள் விற்பனைக்காக நாமக்கல் தினசரி பூ மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகின்றன.

எருமப்பட்டி பகுதியானது இதர வட்டாரங்களை ஒப்பிடும்போது வறட்சி அதிகமான பகுதியாகும். எனவே இங்குள்ள விவசாயிகள் நெல் சாகுபடி செய்யாமல் பூ விவசாயத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே மாறிவிட்டனர். சிலர் நிலக்கடலை, மரவள்ளி போன்றவற்றை பயிர் செய்தாலும், பூக்களையும் ஒருபகுதியில் பயிரிட்டு வருகின்றனர்.

10 ஆண்டுகள் விளைச்சல் தரும்

பூ விதையை ஒருமுறை சாகுபடி செய்தால் போதும், 10 ஆண்டுகள் வரை சாகுபடி செய்ய தேவை இல்லை. மழைக்காலங்களில் பூ செடிகளை வெட்டி விட்டால் மட்டும் போதுமானது. ஆனால் பூக்களை பறிக்க போதுமான ஆட்கள் கிடைப்பது இல்லை. ஏனெனில் அதிகாலை 5 மணிக்கு மேல் காலை 9 மணிக்குள் பூக்களை பறிக்க வேண்டும்.

அதே போல் விளைச்சல் அதிகமாக இருந்தால் போதுமான விலை கிடைப்பது இல்லை. எனவே வீட்டில் உள்ளவர்களே பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியும் என்பவர்கள் மட்டுமே தற்போது பூ விவசாயம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதியில் 'சென்ட்' தொழிற்சாலை அமைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

275 ஏக்கரில் மல்லிகை

இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் வாசு:-

எருமப்பட்டி ஒன்றியத்தில் மல்லிகை பூ 275 ஏக்கரிலும், கோழி கொண்டை 4 ஏக்கர் பரப்பளவிலும், சாமந்தி பூ 35 ஏக்கரிலும், ரோஜா பூ 12 ஏக்கரிலும் தற்போது பயிர் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை நாங்கள் வழங்கி வருகிறோம். மானிய விலையில் விதைகள் கொடுத்து வருகிறோம். தற்போது பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தாலும், பூக்கள் பறிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

புதிய ரகம் சாகுபடி

அலங்காநத்தம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்:-

நான் 2 ஏக்கரில்பூ சாகுபடி செய்து உள்ளேன். குண்டுமல்லி சுமார் 20 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறேன். பச்சை முல்லை, முத்து முல்லை ஆகியவற்றை சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்து வருகிறேன். மேலும் சமீபகாலமாக புதிய ரகமான ஆஸ்திரேலியன் ப்ளூ, ஊதா கத்திரிப்பூ கலர், பிங்க் கலர் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறேன்.

ஜனவரி மாதத்தில் ஒரு ஏக்கருக்கு பூ 1 கிலோ முதல் 1½ கிலோ மட்டுமே பூக்கும். இது பிப்ரவரி மாதங்களில் 10 கிலோ வரை கிடைக்கும். மார்ச் மாதம் 40 முதல் 50 கிலோ பூ பூக்கும். ஏப்ரல் மாதங்களில் 80 முதல் 100 கிலோ வரை பூ விளைச்சல் கிடைக்கும். பூக்கள் விளைச்சல் அதிகரித்தால் விலை குறைந்து விடுகிறது. விளைச்சல் இல்லாத நேரங்களில் பூக்களின் விலை அதிகரிக்கும். அதேபோல் பூ விலை கிலோ ரூ.1,000 ஆக உயர்வு என செய்தி வெளியாகும். ஆனால் எங்களுக்கு கிலோவுக்கு ரூ.500 மட்டுமே கிடைக்கிறது. எனவே உரிய விலை கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்டு தொழிற்சாலை

பொன்னேரியை சேர்ந்தபூ வியாபாரி முருகேசன்:-

பூ விவசாயமானது வறட்சியை தாங்க கூடியது. மேலும் களைக்கொல்லி மற்றும் கத்திரிக்கோல் மூலமாக களை வெட்டிக் கொள்ளலாம். பூக்கள் சீசன் இல்லை என்றாலும் சென்டு கம்பெனிகளுக்கு பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனால் பூ விவசாயத்தில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதில்லை. பூ விளைச்சல் அதிகரிக்கும் நேரங்களில் எங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க எங்கள் பகுதியிலேயே 'சென்ட்' தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story