இடிந்து விழுந்த குடிநீர் கிணறு சீரமைக்கப்படுமா?

வடபொன்பரப்பியில் இடிந்து விழுந்த குடிநீர் கிணறு சீரமைக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு;
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடபொன்பரப்பி கிராமம். இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, பிரம்மகுண்டம் சாலை பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களுக்கு கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, அதன் மூலம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரம்மகுண்டம் சாலை மற்றும் கள்ளக்குறிச்சி சாலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏரிக்கரை அருகில் உள்ள குடிநீர் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி சுற்றுச்சுவரை சீரமைத்து மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க இடிந்து விழுந்த கிணற்றை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வடபொன்பரப்பி கிராம மக்களின் கோரிக்கை ஆகும்.






