சேதமடைந்த பாலம் சரி செய்யப்படுமா?


சேதமடைந்த பாலம் சரி செய்யப்படுமா?
x

தோகைமலை அருகே சேதமடைந்த பாலம் சரி செய்யப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

40 கிலோ மீட்டர் சாலை

கரூர் மாவட்டம், தோகைமலை பகுதி வழியாக செல்லும் குளித்தலை- மணப்பாறை சாலையானது சுமார் 40 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலையானது குளித்தலை மற்றும் தோகைமலையில் இருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை வழியாக மதுரை, திண்டுக்கல் உள்பட தென் மாவட்ட பகுதிகளையும், மணப்பாறை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சேலம், நாமக்கல், பெரம்பலூர் போன்ற வட மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

பாலம் சேதம்

இதில், தோகைமலை வெண்ணிலாபுரம் அருகே குளித்தலை-மணப்பாறை மெயின் சாலையின் குறுக்கே கழுகூர் பெரிய ஏரியில் இருந்து வரும் ஆற்றுவாரியின் பழமை வாய்ந்த பாலம் ஒன்று உள்ளது.இந்த பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பிற்காக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதனால் பாலத்தின் தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.

எதிர்பார்ப்பு

இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி வாகனங்களில் விபத்தில் சிக்கினால் உயிர் இழப்பு ஏற்பட கூட அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் தினமும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சரி செய்து தருவார்களா? என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story