பாரம்பரிய ஆரணி பட்டு தொழிலுக்கு புத்துயிரூட்டும் பட்டு பூங்கா அமைவதில் தாமதம் அரசு நடவடிக்கை எடுக்குமா?
பாரம்பரிய ஆரணி பட்டு தொழிலுக்கு புத்துயிரூட்டும் பட்டு பூங்கா அமைவதில் தாமதம் ஏற்படுவதால் அரசு விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆரணி
பாரம்பரிய ஆரணி பட்டு தொழிலுக்கு புத்துயிரூட்டும் பட்டு பூங்கா அமைவதில் தாமதம் ஏற்படுவதால் அரசு விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆரணி என்றாலே நினைவுக்கு வருவது பட்டுதான். காஞ்சீபுரம், தர்மாவரம் வரிசையில் ஆரணி பட்டு பாரம்பரியம் கொண்டதாகும்.
ஆரணி, சேவூர், முனுகப்பட்டு, தேவிகாபுரம், ஒண்ணுபுரம், எஸ்.வி.நகரம், சுபான்ராவ்பேட்டை, மெய்யூர், மருசூர், அரையாளம், முள்ளிப்பட்டு, துருகம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டு நூலை முருக்கேற்றி பல வண்ணங்களில் தரமான பட்டு சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நம்பி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பட்டு கொள்முதல் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் அதிபர்கள் ஆரணிக்கு வருகிறார்கள். ஆரணியில் இதனை நம்பி விற்பனை சங்கங்களும் செயல்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு விற்பனையாகி ஆரணியின் பெயருக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த பட்டுவை விற்பனை செய்பவர்கள் வாழ்க்கை எங்கேயோ சென்று விட்டது. ஆனால் இதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிலை இன்னும் அதலபாதாளத்தில்தான் உள்ளது என்றால் மறுப்பதற்கில்லை.
புரட்டிப்போட்ட கொரோனா
நன்றாக முன்னேறிக்கொண்டிருந்த இந்த தொழிலை கொரோனா புரட்டிப்போட்டுவிட்டது என்றே சொல்லலாம். அப்போது வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் கொரோனா தொற்று நீங்கிய நிலையில் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஆரணி பட்டு நெசவுக்கு புத்துயிரூட்ட பட்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வருபவர்களும் ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
ஆனால் பட்டு பூங்கா அமைக்கப்பட்டதா என்றால் அதற்குத்தான் விடை கிடைக்கவில்லை. அரசு சார்பில் பட்டு பூங்கா அமைத்தால் ஒரே இடத்தில் தயாரிப்பு, கொள்முதல் விற்பனை என ஒருங்கிணைந்து இருக்கும். ஆனால் அது கனவாகத்தான் இன்னும் உள்ளது.
22 ஏக்கர் நிலம்
எனினும் ஆரணி பகுதியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் ஒருங்கிணைந்து ஆரணி கைத்தறி பட்டு பூங்கா அமைக்க முடிவு செய்து ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலையில் 22 ஏக்கர் நிலத்தை ரூ.3½ கோடிக்கு வாங்கி பதிவு செய்து தயார் செய்துள்ளனர்.
கைத்தறி பட்டு பூங்கா அமைப்பதற்கு அரசு சார்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து ஆரணி கைத்தறி பட்டு பூங்கா இயக்குனர்களுக்கும் அரசு சார்பில் தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அடிப்படை தேவைகளான சுற்றுச்சுவர், சாலை வசதி, தெருவிளக்கு, மின்சார வசதி போன்றவைகள் அமைப்பதற்கு சுமார் ரூ.5 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அரசுக்கு செலுத்தினால் அரசும் ரூ.20 கோடி வழங்கி இந்த பட்டு பூங்கா உருவாகும்.
ஆனால் தமிழக அரசின் கொள்கை அளவிலான ஒப்புதலுக்காக நெசவாளர்கள் காத்திருக்கின்றனர். இதனால் கனவு நனவாகுமா என்ற கேள்வி இன்னும் இருந்து கொண்டே உள்ளது. எனவே இதற்கு வடிவம் கொடுத்து கைத்தறி பட்டு நெசவு பூங்கா கொண்டு வர வேண்டும் என்பதே ஒருமித்த குரலாக உள்ளது.
எதிர்பார்ப்பு
ஒருங்கிணைந்த கைத்தறி நெசவு பூங்கா அமைந்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறுவர். அரசுக்கும் பல கோடி வருமானம் கிடைக்கும். ஆரணி பகுதியும் இந்திய அளவில் மேம்படும். தொழிலாளர்கள் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படும். எனவே கைத்தறி நெசவு பூங்காவிற்கு செயல் வடிவம் கொடுத்து அதனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.