கண்ணாயிர முடையார் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
சீர்காழி அருகே குருமாணகுடி கண்ணாயிர முடையார் கோவில் குளம் சீரமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவெண்காடு:
சீர்காழி அருகே குருமாணகுடி கண்ணாயிர முடையார் கோவில் குளம் சீரமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வட காவிரி
சீர்காழி அருகே குருமாணகுடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற கண்ணாயிர முடையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வட காவிரியில் உள்ள 54 சிவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. மிகவும் பிரதானமான இந்த கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் தொழு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் விலகுவதாக ஐதீகம்.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இதிலும் குறிப்பாக திருஞானசம்பந்தர் தன்னுடைய பதிகத்தில் இந்த கோவிலில் உள்ள குளத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் தொழு நோய் தீரும் என கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற இந்த குளம் கோவிலின் முகப்பில் அமைந்துள்ளது.
பொலிவிழந்த குளம்
பழங்காலத்திலேயே இந்த குளம் கருங்கல் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த குளம் சரிவர பராமரிக்கப்படவில்லை. இதனால் இந்த குளம் பொலிவிழந்து வறண்டு காணப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகையில், காவிரியின் வட பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் வட காவிரி கோவில்கள் என அழைக்கப்படுகிறது. இதில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நீராட முடியாமல் அவதி
அவ்வாறு பிரசித்திபெற்ற இக்கோவில் மற்றும் கோவிலின் முகப்பில் உள்ள குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. குளத்திற்கு நீர் வருவதற்கு வாய்க்கால் இருந்தும், அந்த வாய்க்கால் பல இடங்களில் தூர்ந்து காணப்படுகிறது. இதனால் கோவில் குளத்தில் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது.
மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் குளத்தில் தேங்கி நிற்கும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனைப்படுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவிற்கு உள்ள இந்த குளத்தில் நீர் நிரப்பினால், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
நடவடிக்கை
எனவே பக்தர்களின் நலன் கருதி இந்த குளத்தை மேம்படுத்திடவும், கோவிலுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்திடவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.