மீண்டும் சிறுத்தை நடமாட்டமா..? மருத்துவமனைக்குள் புகுந்ததாக தகவல்
மயிலாடுதுறையை தொடர்ந்து அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந் தேதி சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. பொதுவாக அடர்ந்த காடுகளில் காணப்படும் சிறுத்தை நகர பகுதியில் தென்பட்டது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட தொடங்கினர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கடந்த 3-ந்தேதி சிறுத்தையின் புகைப்படம் சென்சார் கேமராவில் பதிவானது. இந்த புகைப்படத்தை மயிலாடுதுறை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர். அதில் சிறுத்தையின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது.
மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம், ரெயில் நிலையம், அசிக்காடு, மறையூர், கோவங்குடி, ஊர்க்குடி உள்பட பல்வேறு இடங்களில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டுகளை வனத்துறையினர் அமைத்தனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கவும், அதை பிடிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேற்று காஞ்சிவாய், கருப்பூர், எஸ்.புதூர் பகுதியில் நண்டலாறு, நாட்டாறு மற்றும் வீரசோழனாறு ஆற்றின் வழித்தடங்களில் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
கருப்பூர், எஸ்.புதூர், காஞ்சிவாய், சாத்தனூர், மல்லபுரம், வடகரை ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து சிறப்புக்குழுவினரால் தகவல் சேகரிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று முன்தினம் மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது குறித்த தடயங்கள் இல்லை என்ற தகவல் பரவியது. இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.
இதன்படி மயிலாடுதுறை நகர பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? அது எங்கு பதுங்கி உள்ளது? என வனத்துறையினர் நேற்று 9-வது நாளாக தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ல பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.