அரசு பணி காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?
2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசு பணி காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? என போட்டித் தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விரைந்து தேர்வு செய்ய வேண்டும்
அரசு வேலை என்பது, படிக்கும் காலத்தில் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. அந்த கனவை எட்டிப்பிடிப்பவர்கள் சில ஆயிரம்பேர் தான். இந்த கனவை நிறைவேற்றுவதற்கு வழி தெரியாமல் தவிக்கும் இளைஞர்கள் பலர் இருந்தனர்.
இந்த சூழலில் போட்டித் தேர்வுகளே அரசு வேலையை அடைவதற்கான வழி என்பதை இளைஞர்கள் உணரத் தொடங்கி உள்ளனர். இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
போட்டித் தேர்வு எழுதாத இளைஞர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தேர்வை எழுதி வருகின்றனர். இதிலும் சிலர் வருடக்கணக்கில் இதற்காகவே பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு தேர்வும் தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் தேர்வாக அமைகிறது. இதனால் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விரைந்து பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
போட்டித் தேர்வர்களும் அதிகரிப்பு
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்தப்படாததால் 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்ப காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளில் உள்ள 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்பிறகு 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அதிகரித்து 10 ஆயிரத்து 117 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019-ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த போட்டி தேர்வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது.
15 ஆயிரமாக...
கொரோனா தொற்று காலத்தில் தனியார் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள், புதிதாக கல்லூரி படித்து முடித்தவர்கள் அதிகளவில் போட்டித் தேர்வில் கவனம் செலுத்தினர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில், 2 ஆண்டுகளாக நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளி போல மாறிவிட்டது. குறைந்த அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதால் 3 ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த மாணவ, மாணவிகளின் மத்தியில் பெருத்த ஏமாற்றமும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் அரசுப்பணி கனவாகி போய்விடுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதனால் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும் என்றும் போட்டித் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக போட்டித் தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
கொரோனா காலகட்டத்தில்...
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த கோடீஸ்வரன்:- அரசு பணியில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். ஆனால், கொரோனா காலகட்டத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் மிகவும் கவலையாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து விடா முயற்சியுடன் படித்து வருகிறேன். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாத நிலையில் தற்போதும் அதே அளவு காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் 3 ஆண்டுகளாக போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது. இதனால் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் எங்களை போன்ற போட்டித் தேர்வர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அறிவிக்க வேண்டும்.
காலி பணியிடங்கள் அதிகரிப்பு
காரைக்குறிச்சியை சேர்ந்த ப்ரீத்தி:- படித்துவிட்டு போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணிகளுக்கான எந்த பணி வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக பணி ஓய்வு பெற்றவர்கள் மூலம் ஏற்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகவே உள்ளன. எனவே அரசு இப்போது இருக்கும் நிலையில் அதிக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் உறுதியாக உள்ளது. எனவே குறைந்த அளவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிடாமல் அதிக அளவுக்கான பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டால் அதிக பட்டதாரிகள் பயனடைவார்கள். இதனால் அரசு பணிகள் தொய்வு இல்லாமல் சிறப்பாக நடைபெறும். எங்களைப் போன்ற போட்டித் தேர்வர்களின் வாழ்க்கையும் சிறக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.